ஐந்தாம் மற்றும் எட்டாம்வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுமுறையை தமிழக அரசு, நிராகரித்துவிட்டதாக ஏழாம்முறையாக அறிவித்துள்ளது.
திடுக்கென அடுத்த மாதம் மீண்டும் உண்டு எனச் சொல்ல வாய்ப்பு அதிகம். ஏனெனில் நமக்கு வாய்த்திருக்கும் கல்வி அமைச்சர் குட்டிக்கரணம் போடுவதில் தீரர் !

அவர் நம் செலவில் பின்லாந்திற்கெல்லாம் சென்று, அங்கிருக்கும் கல்விமுறையைப்போல் இங்கு சீர்திருத்தப் போகிறாரென அனைவரும் எதிர்பார்க்க, அவரோ 3, 5, 8ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு என இந்தியாவில் யாருமே செய்யத் துணியாததை செய்யத் துணிந்தார் !

பின்லாந்திலோ கல்விக்காக குழந்தைகளை வதைப்பது கடுமையான குற்றமாம். எட்டாவது வயதில்தான் பள்ளிகளில் குழந்தைகளுக்கு அனுமதி. தேர்வுமுறைகள் கிடையாது. இதையெல்லாம் கேட்டறியாமல் அவர் பின்லாந்து சென்று பியானோ வாசித்திருக்கிறார் !

கல்வியாளர்கள் மிகக் கடுமையாக எதிர்த்தார்கள். இடைநிற்றல் அதிகமாகி குழந்தைத் தொழிலாளர்கள் உருவாகும் இருண்டகாலம் மீண்டு விடும் என அஞ்சாத மக்கள் இல்லை.

குலக்கல்வித் திட்டத்தை என்றென்றும் ஆதரிக்கும் மிகச் சிறுகூட்டம் மட்டுமே இத்தகைய பொதுத்தேர்வு அவலங்களை ஆதரித்தனர். சான்று இன்றைய எஸ்.வி.சேகர் அவர்களுடைய ட்வீட் ஒன்று. அவருக்குத் தேர்வுமுறைகளை ரத்து செய்தது மட்டுமல்லாமல், தமிழையும், தமிழர்களையுமேகூடப் பிடிக்கவில்லை. அதைத் தமிழிலேயே வேறு சொல்லித் தொலைப்பார் !

நம்பமாட்டீர்கள். ஐந்தாம், எட்டாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வை, இத்தனைக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தக் கூட்டத்திலிருந்துதான், பதினோராம் (ப்ளஸ் ஒன்) வகுப்பிற்குப் பொதுத்தேர்வு கட்டாயம் தேவை என்கிற குரலும் எழுந்தது !

ஆனால் அது அத்தியாவசியமான குரல். அதுகாறும் பத்தாம் வகுப்பு முடிந்ததும், பதினோராம் வகுப்பு பாடங்களைப் புறக்கணித்து, பன்னிரெண்டாம் வகுப்பு பாடங்களை மட்டும் சொல்லிக் கொடுத்து, ஒட்டுமொத்த மாணவர்களையும் அதிக மதிப்பெண்கள் வாங்கி முழு தேர்ச்சி பெறச் செய்து, பிறகு அதை விளம்பரமாக்கி, கல்வி வணிகம் செய்த முதலைகளின் வெறிக்குப் பலியானது மாணவர்களின் அறிவு!

அதற்கும் கடுமையாகப் போராட வேண்டி வந்தது. அரசு பணிந்து தேர்வுக்கு உத்தரவிட்டது. இன்று பதினோராம் வகுப்பு பாடங்களை முழுமையாக அந்த மாணவர்கள் கற்கிறார்கள், கற்றுத்தரப்படுகிறது!

இப்போது 10, 11, 12 வகுப்புகள் அனைத்துக்கும் பொதுத் தேர்வுகள்தான். அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சியுற்றால் மட்டுமே மேல் படிப்புகளுக்குப் போக முடியும். இவ்வளவு திறனறி சோதனைகள் பத்தாதா ? அதென்ன மூன்றாவதிலிருந்தே உங்களுக்கு வடிகட்டப்பட்ட மாணாக்கர்கள் வேண்டும் ?

இந்த முரட்டு சைக்கோக்களின் பிடிவாதத்தால் பதிமூன்று வயது குழந்தை ஒன்று, பள்ளியில் கொடுத்த நெருக்கடியால் தற்கொலை செய்துக்கொண்டு மாண்டது. பல பள்ளிகளில் நான்காவது, ஏழாவது வகுப்பு மாணவர்களுக்கு முறையே ஐந்தாம், எட்டாம் வகுப்பு பாடங்களை எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். எந்தக் காட்டுமிராண்டிக் கூட்டமேனும் இப்படி செய்யுமா ? எடப்பாடியும், செங்கோட்டையனும் செய்வார்கள் !

வலதுசாரி கல்வியாளர்களைக்கூட இந்தச் செயல் கொஞ்சம் அசைத்துவிட்டது. அவர்களின் உள்மனம் உறுத்த ஆரம்பிக்க அவர்களே கூட இதை எதிர்த்து முணுமுணுத்தனர். மாறாகக் குழந்தைகள் கல்வி நலனில் அக்கறைகொண்ட அனைவரும் கைகோர்த்து கடும் எதிர்ப்பை தொடர்ந்து பதிவுசெய்துக் கொண்டே இருந்ததால் இப்போதைக்குத் தற்காலிகமாக நாம் நிம்மதி பெருமூச்சுவிட அவகாசம் தந்துள்ளனர் !

சரி, அதென்ன தலைப்புல இந்தியான்னு போட்டிருக்கீக… தமிழ்நாடுன்னு போட்டா போறாதாங்கிறீங்களா?

கர்நாடகாவின் பிதர் மாவட்டத்தில் ஒரு பள்ளியில் குழந்தைகள் சிலரை வைத்து CAA எதிர்ப்பு நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். எப்படியோ புகார் போக, காவல்துறை பாய்ந்து வந்து அந்த நாடகத்தை இயக்கிய ஆசிரியர், நடித்த குழந்தையின் தாயார் எனப் பலரைக் கைது செய்திருக்கிறது. கதை இத்துடன் முடியவில்லை. நாடகத்தில் நடித்த அத்தனைக் குழந்தைகளையும் தொடர்ந்து குற்றவாளிகளைப்போல் விசாரித்து வருகிறது! தந்தையுமில்லாமல் தாயும் சிறைக்குப் போய் நிர்க்கதியான ஒரு பிஞ்சு, இனி இந்தமாதிரி தப்பே செய்ய மாட்டேன்… எங்கம்மா, டீச்சரை விட்டுடுங்க என கதறியிருக்கிறது. எடியூரப்பா அண்ட் கோ இதை ரசித்துச் சிரிக்கிறது !

வடக்கிலோ பள்ளிக் குழந்தைகளுக்கான மதிய உணவில் சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ள உப்பு, ஒரு லிட்டர் பாலில் பத்து லிட்டர் தண்ணீர் கலந்து சர்வ நாசம் செய்துக்கொண்டிருக்கிறது யோகி அரசு !

குழந்தைகள் அலறலை இன்பமாய் நுகரும் இத்தகையச் சைக்கோக்களை காலம் தண்டிப்பதெல்லாம் இருக்கட்டும், மறக்கடித்துவிடக்கூடாது !