நவீன இந்தியாவின் மாபெரும் சிந்தனையாளர்களில் ஒருவர் பண்டிதர் அயோத்திதாசர். அவரே தென்னிந்திய சமூக புரட்சியின் தந்தையாக போற்றப்படுகிறார். பவுத்த மறுமலர்ச்சிக்கு வித்திட்ட அயோத்திதாசர் சிறந்த சமூக செயற்பாட்டாளராகவும், தமிழறிஞராகவும் விளங்கினார். அவரது வரலாற்று அறிவும், சித்த மருத்துவ புலமையும், அரசியல் செயல்பாடும் வியப்பை தருபவை. சாதி ஒழிப்பு, சமூக நீதி, பகுத்தறிவு உள்ளிட்ட அம்சங்களில் பாபாசாகேப் அம்பேத்கருக்கும், பெரியாருக்கும் முன்னோடியாக விளங்கினார். புரட்சியாளர்களுக்கெல்லாம் புரட்சியாளராக விளங்கிய பண்டிதர் அயோத்தி தாசரின் பிறந்த தினம் இன்று.

1845-ஆம் ஆண்டு மே 20-ஆம் தேதி சென்னை  ஆயிரம் விளக்குப் பகுதியில் பிறந்த அயோத்தி தாசரின் இயற்பெயர் காத்தவராயன். வல்லக்காளத்தி வீ. அயோத்தி தாசர் பண்டிதரிடம் தமிழ், சித்த மருத்துவம், தத்துவம் ஆகியவற்றை பயின்றார். குடும்ப பணியின் காரணமாக சென்னையில் இருந்து நீலகிரிக்கு இடம்பெயர்ந்த அயோத்திதாசர் கர்னல் ஆல்காட், அன்னிபெசண்ட், பிளவாட்ஸ்கி போன்ற ஆங்கிலேய அறிவுஜீவிகளுடன் நட்பு பாராட்டினார். பழைய ஓலைச்சுவடிகளை சேகரித்து வாசிக்கும் பழக்கம் கொண்ட அவரது குடும்பத்தினர் ஜார்ஜ் ஹாரிங்டன் உள்ளிட்டோருடன் தொடர்பில் இருந்தனர். திருக்குறள், நாலடியார் போன்ற தமிழின் சிறந்த நூல்களின் மூல ஓலை சுவடிகள் இவரது குடும்ப சேகரிப்பில் இருந்தவையே.

தமிழ், ஆங்கிலம்,பாலி, சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளில் புலமை பெற்றிருந்த அயோத்திதாசர் இலக்கியம், சமயம், வரலாறு உள்ளிட்ட தளங்களில் தீவிர ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தார். 1880-களின் தொடக்கத்திலே இம்மண்ணின் பூர்வகுடி மக்களின் மீது திணிக்கப்படும் வன்கொடுமைகளுக்கு எதிராக அரசியல்களத்தில் தீவிரமாக செயல்பட தொடங்கினார். ரெவரண்ட் ஜான் ரத்தினத்துடன் இணைந்து 1885-ல் திராவிடர் கழகம் எனும் அமைப்பை உருவாக்கினார். இந்த அமைப்பின் சார்பில் ‘திராவிட பாண்டியன்”எனும் இதழையும் கொண்டுவந்தார். அயோத்திதாசரின் இந்த அமைப்பு தான் இன்று ஆட்சி அதிகாரத்தில் கோலொச்சும் திராவிட அரசியலுக்கான முதல் வித்து.

1891-ல் திராவிடர் மகாசன சபையை உருவாக்கிய அவர் சமூகத்தில் ஆதி திராவிடர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு தீர்வாக கல்வி, சாதி ஒழிப்பு, இட ஒதுக்கீடு குறித்து தீர்மானம் நிறைவேற்றினார். அப்போதைய சாதிவாரி கணக்கெடுப்பின் போது, ” தீண்டத்தகாதவர்கள் என்போர் இந்து அல்லாதவர்கள். அவர் சாதி பேதமற்ற தமிழர்கள்”என்ற முற்போக்கு கருத்தாக்கத்தை முன்மொழிந்தார். தீவிர பவுத்த ஆய்வில் ஈடுபட்ட அயோத்தி தாசர் ஒரு கட்டத்தில், ”சாதி பேதமற்ற திராவிடர்கள் பூர்வ பவுத்த குடிகள்” எனக்கூறி, இலங்கை சென்று பவுத்தம் தழுவினார்.

அயோத்தி தாசரால் சென்னை ராயப்பேட்டையில் தொடங்கப்பட்ட‌ தென்னிந்திய சாக்கிய பவுத்த சங்கம் வேலூர், திருப்பத்தூர், பள்ளிக்கொண்டா,பெங்களூர், கோலார் தங்கவயல், ஹூப்ளி, ஷிமோகா, பர்மா, இலங்கை, தென்னாப்பிரிக்கா என கடல் கடந்து பரவியது. பவுத்த சங்கம் கிளைவிட்ட இடங்களிலெல்லாம் கல்வி சாலை, நூலகம் அமைத்து சமூக மாற்றத்திற்கான விதை விழுந்தன. தனது ”தமிழன்” ஏட்டின் மூலம் தமிழ் அரசியலுக்கும், திராவிட கருத்தியலுக்கும், பவுத்த சிந்தனைக்கும் உரமூட்டி வந்தார். மாமன்னர் அசோகருக்கு பிறகு இந்திய மண்ணில் பவுத்தத்தை இந்த அளவுக்கு பவுத்தத்தை பரப்பிய பெருமை பண்டிதரையே சாரும்.

பவுத்தத்திற்கும் ஆரியத்திற்கும் இடையே நடந்த போர் தான் இந்திய வரலாறு என்பார் டாக்டர் அம்பேத்கர். அவருக்கு முன்பே இந்த கருத்தை சொன்னவர் அயோத்திதாசர். அம்பேத்கருக்கு அவர் முன்னோடியாக விளங்கியதை பேராசிரியர் லட்சுமி நரசுவின் ”பவுத்த சாரம்” நூலுக்கு அம்பேத்கர் எழுதிய முன்னுரையின் வாயிலாகவும், சாக்கிய பவுத்த சங்கங்களில் மேற்கொண்ட ஆய்வின் வழியாகவும் உணரலாம். இதே போல தமிழக அளவில் பண்டிதமணி ஜி. அப்பாதுரையார், பெரியார் உள்ளிட்டோருக்கு அவர் முன்னோடியாக இருந்ததை அவர்களின் நேரடி பேச்சிலே கண்டடைய முடியும்.

உண்மையை உடைத்து சொல்ல வேண்டும் என்றால் இன்றைய தமிழக அரசியலில் காலூன்றி இருக்கும் அத்தனை தத்துவங்களுக்கும் பெரும் பங்களிப்பை செய்தவர் பண்டிதர் அயோத்தி தாசர். ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மட்டுமே த‌ன் கொள்கை முன்னோடிகளில் ஒருவராக அவரை அங்கீகரித்து கட்சி சுவரொட்டிகளில் இடமளித்து வெகுஜனமயமாக்கியிருக்கிறது. திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித்தும்மெட்ராஸ், கபாலி, காலா என தன் திரைப்படங்களின் வாயிலாக அயோத்தி தாசரின்  குறியீடுகளை காட்சி படுத்திவருகிறார்.

கல்வி உரிமை, சாதி ஒழிப்பு, சமத்துவம், இட ஒதுக்கீடு, பெண் விடுதலை, பவுத்தம், பகுத்தறிவு, இந்துமத எதிர்ப்பு போன்ற முற்போக்கு அரசியலுக்கு இந்திய அளவில் பெரும் பங்களிப்பை செய்த பண்டிதர் அயோத்திதாசர் நெடுங்காலமாக வரலாற்றில் மறைக்கபட்டிருந்தார். அறிவின் எழுச்சியால் இப்போது வரலாற்றில் மறைக்கமுடியாத ஆதவனாக அயோத்திதாசர் உயர்ந்து நிற்கிறார். பண்டிதரை படிப்பதன் மூலமாகவே இன்றைய இளம்தலைமுறை தன்னை உய்வித்துக்கொள்ள முடியும்.