தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்.

2018, மே 22ஆம் தேதியன்று, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாபெரும் போராட்டம் நடத்தினர் மக்கள். போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டு தமிழக அரசு கடந்த 2018, மே 28ஆம் தேதி அரசாணை வெளியிட்டது. துப்பாக்கிச்சூடு நடந்து ஓராண்டு நிறைவுபெற்றுள்ள நிலையில், இதில் உயிரிழந்த 13 பேருக்கும் இன்று நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

இதற்கிடையில், துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தக்கோரி வழக்கறிஞர் ஒருவர் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இதைதொடர்ந்து, மனித உரிமைகள் ஆணையம் துப்பாக்கிச்சூடு தொடர்பாக விசாரணை நடத்தியது. காயப்பட்டவர்களையும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்தும் மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்குத் தமிழக அரசு வழங்கிய இழப்பீடு தொகைகளும், தமிழக அரசு அமைத்த ஒரு நபர் ஆணையம் போன்ற நடவடிக்கைகளும் தங்களுக்கு திருப்திகரமாக இருப்பதாகத் தெரிவித்த தேசிய மனித உரிமைகள் ஆணையம், இந்த வழக்கை இன்று முடித்து வைத்தது.

துப்பாக்கிச்சூடு நடந்து ஓராண்டு நிறைவுபெற்றுள்ள நிலையில், வழக்கை மனித உரிமைகள் ஆணையம் முடித்துவைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.