பிரதமர் மோடி துப்புரவு தொழிலாளர்களின் கால்களை கழுவி அவர்களை பாராட்டுவது ஒருபுறம் இருந்தாலும், அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு அரசு தரப்பில் இருந்து எதும் செய்யவில்லை என ஆவணங்களும், பட்ஜெட் அறிவிப்புகளும் தெளிவாக விளக்குகின்றன. மக்களின் வாழ்வாதாரத்திற்கு நிதி ஒதுக்காத பாஜக அரசு விளம்பரத்திற்கு மட்டும் அதிகளவு நிதி ஒதுக்கியுள்ளது.

கால்களை கழுவிய மோடி

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள கும்பமேளாவிற்கு சமீபத்தில் சென்ற பிரதமர் மோடி, அந்த இடத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள உதவிய துப்புரவுத் தொழிலாளர்கள் ஐந்து பேரின் பாதங்களை கழுவி மரியாதை செய்தார். கடந்த ஞாயிற்று கிழமையன்று (பிப்ரவரி 24) துப்புரவுத் தொழிலாளர்கள் ஐந்து பேரின் கால்களைக் கழுவும் வீடியோவை ட்வீட் செய்திருந்தார் பிரதமர் மோடி.

உத்தரப்பிரதேசம் மாநிலம் கோராப்பூர் சென்றிருந்த பிரதமர் மோடி அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். இதற்கிடையில் கும்பமேளாவிற்கு வழிபாடுவதற்காகச் சென்ற மோடி, கும்பமேளாவை சுத்தம் செய்துவந்த துப்புரவுத் தொழிலாளர்களைச் சந்தித்தார்.

ஒவ்வொரு வருடம் கும்பமேளா நடைபெறும் இடத்தைச் சுத்தமாக வைத்திருக்கும் துப்பரவுத் தொழிலாளர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடமும் இந்தப் பணியை சிறப்பாக மேற்கொண்ட ஐந்து பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் கௌரவிக்கப்பட்டனர். பின்னர் 5 துப்புரவுத் தொழிலாளர்களின் பாதங்களை கழுவி மரியாதை செய்த பிரதமர் மோடி, ”கும்பமேளாவில் கலந்துகொள்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் புனித நீராட வருகை புரிகின்றனர். அந்த இடத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வது என்பது அவ்வளவு எளிதான காரியமில்லை.” என்று கூறினார்.

பாராட்டிய மோடி

இதுதொடர்பாக கடந்த 24ஆம் தேதி வீடியோ ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “இந்தத் தருணத்தை என் வாழ்நாள் முழுவதும் நான் மதிப்பேன். தூய்மையான இந்தியாவை உருவாக்க பாடுபடும் துப்புரவு தொழிலாளர்களுக்கு மரியாதை செய்வதை எண்ணி பெருமைப்படுகிறேன். தூய்மை இந்தியா கனவை நனவாக்க பாடுபடும் அனைவருக்கும் எனது பாராட்டுகள்” எனவும் அதில் பதிவிட்டிருந்தார். அவர் பதிவிட்டு இரண்டு மணி நேரத்திற்குள், 19,000 ட்விட்டர் பயனாளர்கள் அந்த வீடியோவை பார்த்துள்ளனர். 7,200  பேர் அதை மறு ட்வீட் செய்த நிலையில்,  1,700 பேர் தங்கள் கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.

நிவாரண உதவித்தொகை கூட வழங்கவில்லை

துப்புரவுத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் மக்களின் பின்னணியிலும் சாதிய அடையாளங்கள்தான் உள்ளன. தலித் மக்கள், சிறுபான்மையினர், பழங்குடியின மக்கள் என இவர்கள் தான் பெரும்பான்மையாக துப்புரவுத் தொழிலிலும் கையால் மலம் அள்ளும் தொழிலிலும்  ஈடுபடுத்தப்படுகிறார்கள். இதற்கு இந்திய சாதியக் கட்டமைப்பும் ஒரு காரணம். பிரதமர் மோடி துப்புரவு தொழிலாளர்களின் கால்களைக் கழுவி அவர்களைப் பாராட்டுவது ஒருபுறம் இருந்தாலும், அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு அரசு தரப்பில் இருந்து எதும் செய்யவில்லை என ஆவணங்களும் பட்ஜெட் அறிவிப்புகளும் விளக்குகின்றன.

கடந்த ஐந்து ஆண்டுகளாக, ஆட்சியில் இருந்த பாஜக அரசு ஒவ்வொரு ஆண்டும் தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் துப்புரவுத் தொழிலாளர்களுக்காக ஒதுக்கிய பணத்தைச் செலவு செய்யவில்லை. துப்புரவுப் பணியாளர்களின் மேம்பாட்டுக்காக அளிக்கப்பட வேண்டிய நிதியுதவி எதுவும் அளிக்கப்படவில்லை. கழிவுநீர் தொட்டியிலும், விஷ வாயு தாக்கியும் இறந்துபோன துப்புரவுத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்குக்கூட முழுவதுமாக நிவாரண உதவித்தொகை சென்று சேரவில்லை.

1,327 துப்புரவு தொழிலாளர்கள் இறப்பு

2014-2016 ஆகிய இரண்டு ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 1,327 துப்புரவு தொழிலாளர்கள் இறந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலித் மக்கள்தான் பரம்பரையாக இந்த துப்புரவு தொழிலை செய்யவேண்டும் என்கிறது இந்திய சாதி கட்டமைப்பு. இந்தியாவை விட ஏழை நாடுகளில் கூட கழிவுகளை அகற்றுவதற்கு இயந்திரங்கள் இருக்கின்றன. ஆனால், இந்தியாவில்தான் இன்னும் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் கையால் கழிவுகளை அகற்றிவருகின்றனர்.

மனித கழிவுகளை மனிதே அகற்றுவது சட்டப்படி குற்றம் என்றும் அவ்வாறு செய்யக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால், அந்த தீர்ப்பை இங்குள்ள அரசு அதிகாரிகளும் பின்பற்றுவதில்லை. அரசியல்வாதிகளும் பின்பற்றுவதில்லை.

விளம்பரத்திற்கு 3,700 கோடி ரூபாய் செலவு

இந்தியா சுதந்திரம் அடைந்த 46 ஆண்டுகளுக்குப் பின் தான் அதாவது 1993ஆம் ஆண்டு கையால் மலம் அள்ளும் நபர்களுக்காக ஆதரவானச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. அவர்களின் நிலைமையைப் புரிந்து கொள்ளவே அரசிற்கு இத்தனை ஆண்டுகாலம் தேவைப்பட்டுள்ளது. அதற்குப் பின் 2013ஆம் ஆண்டு மலம் அள்ளும் நபர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கவேண்டும் என சட்டத் திருத்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால் அதை நடைமுறைப்படுத்த நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017 – 18ஆம் ஆண்டுக்கான மலம் அள்ளும் நபர்களின் மறுவாழ்வுக்கு ரூபாய் ஐந்து கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்த மத்திய அரசு விளம்பரத்திற்காக மட்டும் 3,700 கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளது. மக்களின் வாழ்வாதாரத்திற்கு நிதி இல்லை, பாஜக அரசின் விளம்பரத்திற்கு மட்டும் நிதி உள்ளது.

கொடுமையான செயல்

மலம் அள்ளும் தொழிலாளர்களைப் பணியமர்த்துதல் தடை மற்றும் அவர்களின் புனர்வாழ்வு சட்டம், 2013, கொண்டு வந்த பிறகு இந்தியாவில் 12,742 துப்பரவு தொழிலாளிகள் இருப்பது அடையாளம் காணப்பட்டது. மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவது மிகவும் கொடுமையான செயல்.

துப்புரவு தொழிலிலும், கையால் மலம் அள்ளும் தொழிலிலும் ஈடுபடுத்தப்படும் தலித் மக்கள் தொடர்ந்து, அதே தொழிலில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று நினைக்கும் மனிதர்களின் மனதில் உள்ள குப்பைகளை முதலில் தூய்மை செய்ய வேண்டும். அதன் பிறகு நாட்டைத் தூய்மை செய்ய வேண்டும். மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் அவலம் என்று நீங்குகிறதா அன்றுதான் அம்மக்களின் வாழ்க்கை மேம்படும்.