மும்பை தொடர்குண்டு வெடிப்பு சம்மந்தமாக சிறையிலிருந்த நடிகர் சஞ்சய் தத்தை முன்கூட்டியே விடுதலை செய்ய மத்திய அரசிடம் அனுமதி பெறவில்லை எனத் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் மூலம் தகவல் கிடைத்ததாகப் பேரறிவாளன் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தகவலை மும்பை எரவாடா சிறை நிர்வாகம் அளித்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு

1991ஆம் ஆண்டு தமிழகத்திற்கு வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சென்னை ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் படுகொலை செய்யப்பட்டார்.இதுதொடர்பாக பேரறிவாளன், நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டு 26 வருடங்களாகச் சிறையில் உள்ளனர்.

சுமார் 20 வருடங்களுக்கு மேலாகச் சிறையில் இருக்கும் ஏழு பேரையும் விடுதலை செய்யும் படி பேரறிவாளன் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஏழு பேர் விடுதலை குறித்து தமிழக அரசே முடிவு செய்யலாம் என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ள தமிழக அரசியல் கட்சிகள், பொதுமக்கள் என அனைவரும் ஏழுபேரையும் உடனடியாக தமிழக அரசு விடுதலை செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டுமெனத் தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் நிறைவேற்றி சுமார் 8 மாதங்களுக்கு மேலாகியும், தமிழக அரசு ஏழு பேரையும் விடுவிக்கவில்லை. இதுதொடர்பாக, அரசியல் கட்சியினரும், இளைஞர்களும் பல்வேறு போராட்டங்களை நடத்திவந்தனர். அனைத்து தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், இன்னும் தமிழக அரசும், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஏழுபேரை விடுதலை செய்யாமல் காலம் கடத்திவருகின்றனர்.

மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கு

1993ஆம் ஆண்டு நடைபெற்ற மும்பை தொடர் குண்டு வெடிப்பில், சுமார் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தின்போது, உரிய அனுமதியின்றி ஆயுதம் வைத்திருந்ததாகக் கூறி, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் கைது செய்யப்பட்டார். இவருக்கு தடா நீதிமன்றம் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து சஞ்சய் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 5 ஆண்டுகளாக சிறைதண்டனை குறைக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி சஞ்சய் தத் மும்பை சிறையிலிருந்து தன்னுடைய விடுதலை காலம் முடியும் முன்பே விடுதலை செய்யப்பட்டார். இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

சஞ்சய் முன்கூட்டியே விடுக்கப்பட்டார்

சஞ்சய் தத் விடுவிக்கப்பட்ட தகவல்களை பற்றி பேரறிவாளனின் வழக்கறிஞர் பிரபு பேசியதாவது, “மகாராஷ்டிராவின் எரவாடா சிறை அதிகாரிகளிடம் சஞ்சய் தத்தை விடுதலை செய்ததற்கு மத்திய அரசின் அனுமதி வாங்கியிருந்தீர்களா? என்ற கேள்வியுடன் ஒரு கோரிக்கை மனுவை அனுப்பியிருந்தோம். ஆனால் அவர்கள் அந்த தகவல்களை தரமுடியாது எனத் தெரிவித்தனர். இதுதொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நாங்கள் கோரிக்கை விடுத்திருந்தோம். தற்போது அந்த தகவல் எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது.” என்றார்.

அதில், சஞ்சய் தத்தை நன்னடத்தை காரணமாக விடுதலை செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சிறையிலிருந்த நடிகர் சஞ்சய் தத்தை முன்கூட்டியே விடுதலை செய்ய மத்திய அரசிடம் அனுமதி பெறவில்லை மும்பை எரவாடா சிறை நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

சட்டங்கள் மாறுபடுமா?

சஞ்சய்தத் தேசிய குற்றத்தில் ஈடுபட்டு மத்திய அரசின் தடா சட்டத்தில் தண்டனை பெற்றவர். இவரை மத்திய அரசின் அனுமதியின்றி மாநில அரசு விடுவித்துள்ளனர். இதன்மூலம் எந்தவித வழக்கிலும் ஒருவரை நன்னடத்தைமூலம் மாநில அரசு விடுவிக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.

“சஞ்சய் வழக்கும் ராஜீவ் கொலை வழக்கும் சிபிஐயால் விசாரிக்கப்பட்ட வழக்குகள். இரண்டும் தடா சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்ட வழக்குகள். இந்த வழக்கிலும் சரி, எங்கள் வழக்கிலும் சரி இன்னும் தேடப்படும் குற்றவாளிகள் இருக்கின்றனர். ஆனால் பேரறிவாளவன் வழக்கில் மட்டும் மத்திய அரசுக்கு மட்டும் உரிமை இருப்பதாகக் கூறுவது வஞ்சிக்கப்படுவதாகும். இதன்மூலம் அரசமைப்பு சட்டப்பிரிவு 161இன் படி மாநில அரசே பேரறிவாளனை விடுவிக்கலாம் என்பது உறுதியாகியுள்ளது.” என்று பேசினார் பேரறிவாளனின் வழக்கறிஞர் பிரபு.

சட்டங்கள் ஒவ்வொருவருக்கும் மாறுபடுமா? என்றும் சஞ்சய் தத்க்கு ஒரு நீதி, பேரறிவாளனுக்கு ஒரு நீதியா என்றும் சமூக வலைதளங்களில் இந்த செய்திகுறித்து விவாதிக்கப்பட்டுவருகிறது. இந்த தகவலை தொடர்ந்தேனும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் தமிழக அரசு விடுவிக்குமா? என்றும் சமூக வலைதளங்களில் கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.