கொரோனாவைத் தடுக்கும் அரசின் நடவடிக்கைகள் ஏழைகளின் சுய மரியாதையையும் நம்பிக்கையையும் சிதைக்கிறதா?- ஹர்ஷ் மந்தர்

தமிழில் : செந்தில் குமார்

“தந்தூரி சப்பாத்தி செய்ய கற்றுக்கொண்டு, ஒரு நாளைக்கு 500 ரூபாய் சம்பாதித்து வந்தேன். நான் இப்போது இரண்டு சப்பாத்திக்காக உங்களிடம் கையேந்தி நிற்கிறேன்.”

“நான் கொரோனாவால் சாக மாட்டேன். அதற்கு முன்பே பட்டினியில் செத்துவிடுவேன்.”

பல்வேறு நபர்களிடமிருந்து இதே குரலை நான் ஒரு டஜன் முறை கேட்டிருப்பேன். எங்களால் முடியாது என்று தெரிந்தும் பழைய தில்லியில் வீடற்று தெருவில் நின்ற ஆயிரக்கணக்கானோருக்கு உணவு வழங்கும் இளைஞர்களின் முயற்சியில் என்னையும் இணைத்துக்கொண்ட போது கேட்ட குரல்கள் இவை. நாங்கள் உங்களோடு இருக்கிறோம் என்பதைத் தாண்டி எங்களால் அவர்களுக்கு பெரிதாக எதையும் செய்ய முடியவில்லை. “பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எல்லாம் இதோடு ஒப்பிடவே முடியாது” என்றார் ஒருவர். “இந்த முறை உயிர் தப்புவோமா, எப்படி உயிர் தப்புவோம் என்று எங்களுக்குத் தெரியவில்லை.”

அதற்கடுத்து ஒரு மணி நேரம் கழித்து நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்த நிவாரணத் திட்டத்தைக் கேட்ட போது அதிர்ச்சியும் துக்கமும் ஏற்பட்டது. கொரோனா தொற்றினால் ஏற்படும் பொருளாதார மந்தநிலையிலிருந்து ஏழைகள் காக்கப்படுவார்கள் என்று அவர் பேசிக்கொண்டிருந்தார். “ஒருவரும் பட்டினி கிடக்க மாட்டார்கள்” என வாயால் பேசிக்கொண்டிருந்தார்.

ஒரு குடும்பத்திற்கு ஐந்து கிலோ எக்ஸ்ட்ரா கோதுமை அல்லது அரிசி, ஒரு கிலோ பருப்பு, வயதானவர்கள், ஊனமுற்றவர்கள், விதவைகளுக்கு 1,000 ரூபாய், ஜன் தன் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு அடுத்த மூன்று மாதங்களுக்கு 1,500 ரூபாய், ஏற்கனவே இருக்கும் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு 2,000 ரூபாய். இதையெல்லாம் நிறைவேற்ற முடியும் என அவர் உண்மையிலேயே நம்பினாரா?

பல லட்சம் முறை சாரா தொழிலாளர்கள், விவசாயக் கூலிகள், கைவிடப்பட்டவர்கள் வாழ்வில் ஏற்படுத்தக்கூடிய பெரும் சீரழிவு குறித்த சிறு அங்கீகாரத்தைக்கூட நிதியமைச்சரின் பிரதமரின் முந்தைய உரைகளில் கேட்க முடியவில்லை. ஏழைகளின் பிரச்சனைகளை சிவில் சமூகம் குறைக்க வேண்டும் என்று மோதி மிக சாமர்த்தியமாக பேசினார். குறைந்தபட்சம் நிர்மலா சீதாராம் ஏழைகளுக்கு என்ன செய்வது என்று பேசவாவது செய்தார். ஆனால் ஏழைகள் எதிர்கொள்ளும் பெரிய சுனாமியை இந்த சிறு பலகை தடுத்து நிறுத்துமா?

இதில் ஒவ்வொன்றிலும் அமலாக்கச் சிக்கல்கள் இருக்கின்றன. ஊரடங்கின்போது அவர்கள் எவ்வாறு பணத்தை எடுப்பார்கள்? தெருவோர குழந்தைகள், வீடற்றவர்கள், ஊனமுற்றவர்கள், தொலைதூர பகுதிகளில் இருப்பவர்கள், நாடோடி சமூகத்தினர் ஆகியோருக்கு உணவு ஒரு அன்றாட பிரச்சனையாக இருக்கும். அவர்களிடம் வங்கிக் கணக்கு இருக்காது என்ற வங்கிக் கணக்கு அட்டையும் இருக்காது.

ஒட்டுமொத்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஏற்படுத்திய தாக்கத்தைவிட இரண்டே நாள் ஊரடங்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியதாக பொருளாதார வல்லுனர் ஜெயதி கோஷ் சமீபத்திய நேர்காணலில் கூறியிருக்கிறார். பொருளாதாரம் படு பாதாளத்திற்குள் சரியும் அபாயத்திலிருப்பதாக அவர் கூறினார். இந்த மோசமான நிலை குறித்த அச்சுறுத்தலை புரிந்துகொள்ள நீங்கள் பொருளாதார வல்லுனராக இருக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை.

உதாரணத்திற்கு, யார் அறுவடை செய்வார்கள்? அறுவடை செய்யப்பட்டதை யார் வாங்குவார்கள்? சிறு-குறு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. கட்டுமானத் தொழில் முடங்கிவிட்டது. உணவங்கள், தையலகங்களும் மூடப்பட்டுவிட்டன.  வீடற்றவர் ஒருவர் கூறினார்: “நான் இந்த வீதிகளில்தான் வளர்ந்தேன். எனக்கு குடும்பமேதும் இல்லை. தந்தூரி சப்பாத்தி செய்ய கற்றுக்கொண்டு ஒரு நாளைக்கு 500 ரூபாய் சம்பாதித்து வந்தேன். நான் இப்போது இரண்டு சப்பாத்திக்காக உங்களிடம் கையேந்தி நிற்கிறேன்.” அவமானத்தால் நான் தலை குனிந்து நின்றேன்.

நாங்கள் உணவு வழங்கிய இடங்களில் ஆயிரக்கணக்கான வீடற்றோர் சாப்பாட்டுக்காக க்யூவில் நின்றார்கள். யாராவது உணவோடு வருவார்கள் என ஆறு மணி நேரம் காத்திருந்ததாக பலர் கூறினார்கள். கடந்த மூன்று நாட்களில் இரண்டு வேளை மட்டுமே சாப்பிட்டு வருவதாக பலர் கூறினார்கள். இலவசமாக அவர்களுக்குக் கிடைத்த உணவோ அவர்களது கால் வயிற்றைக்கூட நிரப்பும் அளவுக்கு இல்லை.

ஏதோ ஒரு மூலையில் யாரோ இலவசமாக உணவு வழங்குகிறார்கள் புரளி பரவினால் அந்த இடத்தில் திமுதிமுவென கூட்டம் திரண்டுவிடுகிறது. நகர முடியாதவர்கள், வயதானவர்கள், பெண்கள் குழந்தைகள் எல்லாம் இந்தப் போட்டியில் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடுகிறார்கள். அந்த உணவு போதுமானது மட்டுமல்லாமல், அவர்களின் தன்மானத்திற்கு இழுக்கு தரும் வகையிலானது. அவர்கள் கேட்பது வேலை, இரக்கம் அல்ல. அரசின் நடவடிக்கையால் அவர்களின் வேலை பறி போகும் பட்சத்தில் தனி நபர்கள் போடும் பிச்சையில் அவர்கள் வாழ வேண்டிய நிலை ஏற்படக்கூடாது. மாறாக அவர்களுக்கு உணவளிப்பது அரசின் உச்சபட்ச கடமையாக இருக்க வேண்டும். பட்டினி மேலோங்கிக்கொண்டே போகும் இன்னும் இரு வாரங்களையாவது அவர்கள் கடந்தாக வேண்டும்.

உணவும் இல்லை, வேலையும் இல்லை என்ற நிலையில் தங்கள் கிராமத்திற்குச் செல்வதுதான் உயிர் பிழைத்திருப்பதற்கான, உணர்வு நலனை பாதுகாத்துக்கொள்ள வழி என பலர் கூறினார்கள். ஆனால் பிரதமரின் அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே ரயில்களும் பஸ்களும் முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்டன. பிற நாடுகளில் சிக்கியிருந்தவர்களை சிறப்பு விமானம் அமர்த்தி நாட்டுக்கு அழைத்த வர முடிந்த இந்திய அரசாங்கம்தான் இது. அவர்களோடு மருத்துவர்களையும் அனுப்ப முடிந்தது. ஆனால் உணவும் இல்லாமல் வேலையும் இல்லாமல் நாட்டின் ஒரு மூலையில் சிக்கிக்கொண்ட லட்சக்கணக்கான தொழிலாளர்கள் விஷயத்தில் தங்களுக்கு பொறுப்பு இருப்பதாக இந்த அரசாங்கம் உணரவே இல்லை. மாநில எல்லைகளை நோக்கி அவர்கள் நடந்து சென்றால் போலீஸிடம் அடிவாங்குகிறார்கள். அதையும் மீறிச் செல்பவர்களில் பலர் பல ஆயிரம் கிலோமீட்டர் நடந்தே செல்ல வேண்டியுள்ளது. பட்டினியையும் போலீஸையும் தாண்டி அவர்கள் தங்கள் கிராமத்திற்குச் சென்றாக வேண்டும். நாடெங்கும் ஆங்காங்கே லாரி டிரைவர்கள் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எந்த தப்பிக்கும் வழியும் இல்லை.

சிறிய அளவிலான நிதி நிவாரண வாய்மொழி அறிவிப்புகளைத் தாண்டி அவர்களிடம் ஏதுமில்லை. கிருமி தொற்றும் போது அவர்களைக் காக்கும் சுகாதார கட்டமைப்பு இருக்குமா என்பதற்கு எந்த உறுதியும் இல்லை. அவர்கள் எங்கு பரிசோதனை செய்துகொள்வார்கள், அதற்கு யார் காசு கொடுப்பார்கள்? மருத்துவப் படுக்கைகள் இருக்குமா, வெண்டிலேட்டர்கள் கிடைக்குமா? இந்த கொள்ளை நோய் தீரும் வரு தனியார் மருத்துவ சேவைகளை பொதுவுடமை செய்வதாக ஸ்பெயின், நியூஸிலாந்து நாடுகள் அறிவித்துள்ளன. அப்படி ஏதும் இங்கு நடக்காவிட்டால் பட்டினியாலோ கொரோனா நோயாலோ, எது அவர்களை முதலில் பீடிக்கிறதோ அதன்படி, ஏழைகள் சாகப் போகிறார்கள். இந்த சமயத்தில் எந்த பேதமும் இல்லாமல் பிரதமரை ஆதரிக்க வேண்டும் என்று குரல்கள் வருகின்றன. நினைத்துப் பார்க்க முடியாத இந்த பேரிடர் சமயத்தில் பிரதமர்தான் தலைமை கமாண்டர் என ப.சிதம்பரம் கூறியிருக்கிறார். பல அமைச்சர்களும் அதை வழிமொழிகிறார்கள். ஆனால் அதிர்ச்சி ஏற்படுத்தும் ஏழைகளுக்கு எதிரான இந்த ஊரடங்கை என்னால் ஏற்க முடியாத நிலையில் இருக்கிறேன். நாட்டை முடக்கிப் போடாமல் கிருமித் தொற்றை தடுத்த தென் கொரியா, தைவானிடமிருந்து நாம் பாடம் கற்க வேண்டும். ஊரடங்கைத் திரும்பப் பெறுவது பற்றி நாம் பரிசீலிக்க வேண்டும்.

பொது மக்கள் மீது இந்த அரசுக்கு எந்த கனிவும் இல்லை. பணக்காரன், ஏழை என்ற வித்தியாசமின்றி அனைவருடனும் நிற்கும் கருணை உள்ளம் இவர்களுக்கு இல்லை. இந்தியாவின் ஆன்மாவாக இருக்கும் மகாத்மா காந்தியை இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. குழப்பமும் சந்தேகமும் இருக்கும் போது, மிக அதிகமான பாதிப்பை சந்திக்கப் போகும் சமூகப் பிரிவினர் பற்றி யோசிக்க வேண்டும் என்பது அவர் சொன்ன அறிவுரை. எடுக்கப்படும் நடவடிக்கைகள் அத்தகைய விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையயைும் சுதந்திரத்தையும் உயர்த்துமா என சுய கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். அத்தகைய கடைக்கோடி மக்கள் ஏராளமானோரை நான் இன்று கண்டேன். அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் உங்களையும் என்னையும் பாதுகாக்கலாம். ஆனால் அந்த விளிம்புநிலை மக்களின் தன்மானத்தையும் உயிர் பிழைத்திருப்பதற்கான நம்பிக்கையையும் உயர்த்துவதற்கு இந்த அரசாங்கத்திடம் ஏதுமில்லை.

நன்றி:

https://indianexpress.com/article/opinion/columns/coronavirus-covid-19-lockdown-poor-6333452/?fbclid=IwAR18PaOL_sr6-wCaTwwItHAiOlLz31qbGXi4OXW3E6QfVihYEpIj39JKlcI

தமிழில் : செந்தில் குமார்