நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் உதித் சூர்யாவுக்கு முன் ஜாமீன் வழங்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மறுத்துவிட்டது.

மருத்துவக் கல்லூரிகளில் நீட் தேர்வு அடிப்படையில் நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வகுப்புகள் தொடங்கியுள்ளன. தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் 100 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்றது. அதில் சென்னையைச் சேர்ந்த மாணவர் உதித் சூர்யா, ஆள் மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதிவிட்டு கல்லூரியில் சேர்ந்திருப்பதாக கல்லூரி முதல்வருக்கு இ-மெயில் மூலம் புகார் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து விசாரணை நடத்த 4 பேராசிரியர்கள் கொண்ட விசாரணைக் குழுவை, மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் அமைத்தார். இந்தக் குழு நடத்திய விசாரணையில், உதித் சூர்யாவின் தந்தை, சென்னை அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வருவது தெரியவந்தது.

உதித் சூர்யா மற்றும் அவரது தந்தையிடம் நடத்தப்பட்ட விசாரணையில், உதித் சூர்யா சென்னையில் இரண்டு ஆண்டுகளாக தேர்வில் கலந்துகொண்டு தோல்வியடைந்ததாகவும், பின்னர் மும்பையில் இந்த ஆண்டு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றதாகவும் தெரிவித்தனர். பல கேள்விகளுக்கு முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அளித்துள்ளனர்.

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டில் உள்ள படமும், மாணவரின் உண்மையான தோற்றமும் வேறு வேறாக இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இந்தத் தேர்வில் 385 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருப்பதும் தெரியவந்துள்ளது. நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் குறித்து மருத்துவக் கல்வி இயக்ககத்தில் கல்லூரி முதல்வர் அறிக்கை அளித்தார். மேலும், மாணவர் மீது காவல் நிலையத்திலும் புகார் அளித்தார்.

இதனிடையே, ஆள் மாறாட்டம் செய்ததை விசாரணைக் குழுவிடம் உதித் சூர்யாவும், அவரது தந்தையும் ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்பட்டது.

முன்னதாக மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் மனு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி பேசும்போது, “நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடைபெற்றிருந்தால், அது மிகவும் வருத்தம் அளிக்கும் செயலாகும். நடந்த சம்பவங்களைப் பார்க்கும்போது ‘வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ திரைப்படத்தில் நடைபெற்றதுபோல் உள்ளது” என்று கூறினார்.

மாணவர் உதித் சூர்யாவை சிபிசிஐடி முன்பு விசாரணைக்கு ஆஜர்படுத்த முடியுமா என்று அவருடைய வழக்கறிஞர்களிடம் வினவினார். மேலும், இதற்கான சாத்தியத்தை மாணவர் தரப்பிடம் அவருடைய வழக்கறிஞர்களே கேட்டுத் தெரிவிக்கும்படி நீதிபதி கூறினார்.

அதேபோல், உதித் சூர்யா வழக்கு முழுமையாக எப்போது சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்படும் என தமிழக அரசுக்கும் கேள்வி எழுப்பினார். பின்னர், இந்த வழக்கை பிற்பகல் 2.15 மணிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். மீண்டும் வழக்கு பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பில், “மாணவர் உதித் சூர்யாதான் மகாராஷ்டிராவில் தேர்வு எழுதினார். சிலர் பணம் பறிக்கும் நோக்கத்தில் தேவையற்ற சர்ச்சையைக் கிளப்பியுள்ளனர். அதனால் மாணவர் கடும் மன உளைச்சலில் உள்ளார். அவருக்கு முன் ஜாமீன் வழங்கினால் விசாரணைக்கு ஆஜர்படுத்துகிறோம்” என்று கூறப்பட்டது.

அதற்கு அரசுத் தரப்பில், குற்றத்துக்கான முகாந்திரம் இருப்பதால் மாணவரைக் கைது செய்து காவலில் எடுத்து விசாரிக்க விரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “தேர்வில் ஆள்மாறாட்டம் என்பது தீவிரமான குற்றம். இதன் பின்னணியில் உள்ள உண்மை தெரிய வேண்டும். மனுதாரர் மன அழுத்தத்தில் இருப்பதாகக் கூறப்படுவதாலேயே அவர் நீதிமன்றத்தில் சரணடைந்தால் உடனே ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்க கருணை அடிப்படையில் நீதிமன்றம் தயாராக இருக்கிறது. ஆனால், முன் ஜாமீனுக்கு வாய்ப்பே இல்லை. மாணவர் சரணடைவது குறித்து அவர் தரப்பு வழக்கறிஞர்கள் கேட்டுக் கூறலாம்” எனத் தெரிவித்து வழக்கை அடுத்த செவ்வாய்க்கிழமைக்கு (அக்.1-ம் தேதி) ஒத்திவைத்து உத்தரவிட்டார்.