பால் ரீதியிலான வேறுபாடுகள், அடக்குமுறைகள் எவ்வளவு தூரம் நம்முள் ஆழ வேரூன்றி இருக்கின்றன! வழக்கமாகிவிட்ட சில யோசனைகள் சட்டங்கள், நீதிமன்றங்களிலும் உட்புகுந்திருக்கின்றன. அவற்றுள் ஒன்றுதான், பள்ளிக்குழந்தைகளுக்கான  மதிய உணவு சமைப்பதை பகுதி நேர வேலை என்று சொல்லுவது. சமீபத்தில் பீகாரில் மதிய உணவுத் திட்ட ஊழியர்கள் இணைந்து ஒரு தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். காரணம், ஊழியர்கள் என்ற பொதுப்பெயர் இங்கு, பெண்களைக் குறிப்பது மட்டும்தான். ஏனென்றால், இங்கு பணி என்பது மதிய உணவு சமைப்பது! ஆகையால், இங்கு ஊழியர்கள் பெண்களாக மட்டுமே இருக்க முடியும். நாட்டில் மிகக் கடுமையான பால்பேத அடக்குமுறை நிகழ்ந்துகொண்டிருப்பது இந்தத் துறையிலும்தான். பீகாரில் ஒரு நாளைக்கு சத்துணவு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் 37 ரூபாய். அரசின் கணக்குப்படி, பீகாரில் கிட்டத்தட்ட 71,000 பள்ளிகளில் படிக்கும் 1.2 கோடி பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு சமைக்கும் ஊழியர்களின் எண்ணிக்கை 2,48,000. இவர்களில் பெரும்பாலனவர்கள் பெண்கள். ஒவ்வொருவரும் தினமும் 300 குழந்தைகளுக்கு உணவு சமைக்கிறார்கள். கிட்டத்தட்ட இந்த பணி தினமும் 7 முதல் 8 மணி நேரத்தை எடுத்துக்கொள்கிறது. இவர்களுக்கு வழங்கப்படும் மாதச் சம்பளம் 1,250 ரூபாய். கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் மதிய உணவு ஊழியர்களுக்கான சம்பளம் கிட்டத்தட்ட 6000. ஹரியாணா அரசு 2500, பஞ்சாப் மாநில அரசு 1800 ரூபாய் வழங்குகிறது.

மதிய உணவுத் திட்டம் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டு, அதற்கென ஊழியர்கள் தேவைப்பட்ட பொழுது பெண்கள் ஆர்வமுடன் முன்வந்தனர். அதற்குக் காரணம், வயல் வேலைகளில் நிலவி வந்த சகித்துக்கொள்ள முடியாத பால்ரீதியிலான அடக்குமுறைகள்தான். சம்பளத்தில் தொடங்கி, வேலை நேரம்வரை தொடர்ந்த அடக்குமுறைகள் பெண்களை மதிய உணவு வேலைக்கு இழுத்து வந்தன. இன்றும் மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் கிட்டத்தட்ட வயது வந்த பெண்கள் பலர் தங்களது கருப்பைகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிவிடுகின்றனர். ஆதலால், அந்த பிரதேசத்தில் வளர்ச்சியடைந்த கருப்பையுடன் ஒரு பெண்ணைப் பார்ப்பது அரிது. ஏனென்றால், மாதவிடாய் காலங்களில் கரும்பு வெட்டும் வேலைக்கு வர முடியாமல் போனாலோ அல்லது வெட்டப்படும் கரும்புகளின் எண்ணிக்கை குறைந்தாலோ சம்பளம் குறையும். மேலும், கரும்பு வெட்ட ஆட்களைக் கூட்டிச் செல்லும் கான்ட்ராக்டர்களே கருப்பை அகற்றும் அறுவைச் சிகிச்சைக்குப் பணம் கொடுத்து உதவுகிறார்கள், அந்தப் பணம் கொஞ்சம் கொஞ்சமாக சம்பளத்தில் பிடித்தம் செய்து கொள்ளப்படுகிறது. பீகாரில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கும் பண்ணை முதலாளிகளிடமிருந்து விடுபடும் ஒரு வாய்ப்பாகத்தான் பெண்கள் இந்த மதிய உணவுத் திட்டத்தைப் பார்த்தார்கள். சுயமரியாதையுடன், சுதந்திர உணர்வு தரும் வேலையாக இது அவர்களுக்கு இருந்தது. ஆனால், இந்த வேலையிலும் அவர்களின் உழைப்புக்குத் தரப்படாத அங்கீகாரம், ஒரு ஆணுக்கு சமமாக இல்லாத ஊதியம் என எல்லா வழிகளிலும் ஊடுருவி அடக்குமுறையை விதைக்கும் பால் வேறுபாட்டை எதிர்த்து கேள்வி கேட்கத் துவங்கியிருக்கிறார்கள்.

அரசைப் பொறுத்தவரையில் மதிய உணவு திட்டத்தில் சமைக்கும் பெண்கள் ஊழியர்கள் கிடையாது, தன்னார்வலர்கள்! ஏனென்றால், சமையல் என்பது தாய்மையுடன் பெண்கள் மற்றவர்களுக்காக ஆற்றும் கடமை, அது பணி கிடையாது. இந்த அடைப்படைவாதத்தைப் பிடித்துக் கொண்டு லட்சக்கணக்கான பெண்களின் உழைப்பை நிராகரித்துக் கொண்டிருக்கிறது அரசு. 2011-இல் பஞ்சாப் ஹரியாணா உயர் நீதிமன்றத் தீர்ப்பில் சத்துணவு ஊழியர்கள் சமமான ஊதியம் கோர முடியாது என்றும் பள்ளிக் குழந்தைகளுக்கு ஒரு வேளை உணவு சமைப்பது முழு நாள் வேலையாகாது என்றும் குறிக்கப்பட்டிருக்கின்றது. 300 பேருக்கு சமைக்க தேவையான உணவுப் பொருள்களை வாங்குவது முதல் அவற்றைக் கழுவி, அலசி, நறுக்கி, சமைத்து, பரிமாறி, பாத்திரங்களைக் கழுவு அடுக்கி, சமையலறையை சுத்தம் செய்து, இன்னும் பள்ளியில் சுத்தம் செய்ய சொல்லியிருக்கும் இடங்களையும் சுத்தம் செய்து, மேற்கொண்டு பள்ளிகளில் திணிக்கும் வேலைகளையும் செய்து முடிப்பது பகுதி நேர வேலை என்று நீதிமன்றம் சொல்லியிருக்கிறது, மேலும் இந்த வேலைக்கு சமமான ஊதியம் கேட்க முடியாது என்றும் சொல்லியிருக்கிறது.

ஒரு நாளைக்கு சராசரியாக இந்திய பெண் ஒருவர் சம்பளம் தரப்படாத வேலையில் 5.8 மணி நேரம் செலவிடுகிறார், ஒரு சராசரி இந்திய ஆண் 51.8 நிமிடங்களையே செலவிடுகிறார். வீட்டு வேலை, சமையல் இவை எல்லாம் வேலை என்ற பட்டியலுக்குள் வராது, இந்த பிற்போக்குத்தனம் நாடு முழுவதும் உள்ள சத்துணவுத் திட்ட ஊழியர்களுக்கு முறையான  அங்கீகாரத்தைக் கொடுத்துவிடாது. வீட்டு செலவு, பயணச் செலவு, குழந்தைகளுக்குக் கல்வி, உடல்நலச் செலவு என அனைத்தையும் 1250 ரூபாய்க்குள் முடிக்க முடியாது. பணியிடங்களில் பாலியல் அத்துமீறல்கள், குறிக்கப்பட்ட வேலையையும் தாண்டி பிற வேலைகளையும் தலையில் கட்டுவது, அத்தனைக்கும் பிறகு இந்த வேலையை பகுதி நேர வேலை என்று சொல்லுவது என்ன ஒரு மோசமான அடக்குமுறை என்ற கேள்வி எழத் தொடங்கியிருக்கிறது. இந்தக் கேள்வி வழி இந்தப் பிற்போக்குத்தனங்கள் ஒழியட்டும்.