வாரனாசியிலுள்ள இந்து பல்கலைக்கழகத்தில் தலித் பெண் ஒருவர் கழிவறை பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் அங்கு மாணவர்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கல்லூரியின் அருகில் உள்ள உதவி மையத்தின் வெளியில் அமர்ந்திருந்ததாகவும் அப்போது கல்லூரி வளாகத்தின் உள்ளிருக்கும் கழிவறைக்குச் சென்றபோது அங்கிருந்த காவலர் அப்பெண்ணிற்கு அனுமதி மறுத்ததாகவும் தெரிய வந்துள்ளது. இதுபற்றி அப்பெண் கூறியபோது தான், “அந்தக் கல்லூரி மாணவிதான் என்பதை எடுத்துக்கூறிய பின்னரும்தான் அனுமதிக்கப்படவில்லை என்றார். தான் தலித் என்பதாலேயே தன்னிடம் பாகுபாடுகாட்டியதாக அப்பெண் குற்றம் சாட்டியுள்ளார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்திலுள்ள பெண்கள் கல்லூரி முதல்வர் மற்றும் துணை வேந்தர் ஆகியோரிடம் இதுபற்றி புகார் அளித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு அக்கல்லூரி வளாகத்திலேயே ஒரு மாணவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தாலும், சில தினங்கள் முன்பு உள்ளூர் பாஜக பிரமுகரின் கார் மோதி அவ்வளாகத்திலேயே இரு மாணவர்கள் பலியான சம்பவத்தாலும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து பதற்றமான சூழலே நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.