அதிமுக கூட்டணியில் பாமக இணைந்து வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கவுள்ளது. இதில், உடன்பாடு இல்லாதா பாமக மாநில துணை தலைவர் நடிகர் ரஞ்சித், தன்னுடைய பதவியை இன்று (பிப்ரவரி 26) ராஜினாமா செய்தார்.

அதிமுகபாமக கூட்டணி

2019 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலை தமிழகத்தில் திமுகவுடன் இணைந்து காங்கிரஸ் சந்திக்கவுள்ளது. இதில் மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளும் இடம் பெற்றுகிறது. இந்நிலையில், ஆளும் கட்சியான அதிமுக கூட்டணியும் உறுதியாகியுள்ளது. அதிமுக-பாமக-பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கவுள்ளது.

பாஜகவிற்கு 5 தொகுதிகளும், பாமகவிற்கு 7 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக அமைச்சர்கள் மீது 24 ஊழல்கள் பட்டியல் அடங்கிய ஒரு மனுவை ஆளுனரிடம் அளித்து நடவடிக்கை எடுக்கும்படியும், அதிமுகவின் கதை என்ற  ஊழல் குறித்த புத்தகத்தையும் வெளியிட்டு அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்த கட்சி பாமக. இன்று அந்த கட்சியுடனே பாமக கூட்டணி வைத்துள்ளது குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

பதவியை ராஜினாமா செய்த ரஞ்சித்

அதிமுகவுடனான கூட்டணி முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக இளைஞரணி செயலாளர் ராஜேஸ்வரி பிரியா தனது பதவியை ராஜினாமா செய்ததுடன், அக்கட்சியில் இருந்து விலகினார். இதைதொடர்ந்து, பாமக மாநில துணை தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் நடிகர் ரஞ்சித்.

கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஞ்சித், ”அதிமுகவுடன் பாமக இணைந்து கொண்டதில் வேதனை அடைகிறேன். மதுக்கடைக்கு எதிராக போராடியர்கள் எப்படி மதுக்கடை நடத்துபவர்களிடம் கூட்டணி வைத்துள்ளனர். யாரை எதிர்த்து போராடுகிறோமோ அவர்களுடனேயே விருந்து சாப்பிடுவது வேதனை அளிக்கிறது.” என்றார்.

மாற்றம், முன்னேற்றம், ஏமாற்றம்

”அதிமுகவுடன் கூட்டணி வைத்து இளைஞர்களையும், பொதுமக்களையும் நொடிப்பொழுதில் பாமக ஏமாற்றிவிட்டது. மாற்றம், முன்னேற்றம் என்று கூறிய அன்புமணியால் ஏமாற்றம்தான் மக்களுக்கு மிஞ்சும்” என்று ரஞ்சித் கூறினார்.

”நான் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பாமகவில் சேர்ந்தேன். ஒரு நொடி பொழுதில் எனது கனவு கலைந்தது. நான் எனது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டேன். அதை கூறதான் உங்களை இங்கு அழைத்தேன். எனது அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து கட்சி பொறுப்புகளில் இருந்தும் விலகி கொள்கிறேன். எட்டு வழிச் சாலைக்காக நான் மக்களை சந்தித்தேன். அதில் வழக்கு போட்டார்கள். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. அதை ஒரு நொடி நினைத்து பார்த்தார்களா. எப்படி அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முடிந்தது.

பதவி, பணத்திற்காகதான் கூட்டணி

”கூட்டணி தொடர்பாக எந்த தொண்டர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது?” என்று கேள்வி எழுப்பிய ரஞ்சித், ”தொண்டர்களை சந்தித்துதான் கூட்டணி வைத்ததாக அன்புமணி கூறியது சிரிப்புதான் வருகிறது” என்றார்.

”4பேருக்கு கூஜா தூக்கிக்கொண்டு என்னால் வாழ முடியாது. அனைத்து அமைச்சர்கள் மீதும் ஊழல் புகார் கூறிவிட்டு, அதிமுகவுடன் எப்படி கூட்டணி வைக்க முடியும். பாமக, அதிமுக கூட்டணியை மக்கள் விரும்பவில்லை. பதவிக்காகவும், பணத்திற்காகவும் இந்த கூட்டணி வைத்துள்ளனர்.” என்று தெரிவித்தார் நடிகர் ரஞ்சித்.