இருப்பிட சான்றிதழ் போலியாக இருந்ததால் 3,616 பேரின் விண்ணப்பங்கள் ஆரம்பத்திலேயே நிராகரிப்பு செய்யப்பட்டதாகவும், போலி இருப்பிட சான்றிதழ் சமர்ப்பித்தால் குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.

போலி இருப்பிடச் சான்றிதழ்கள் மூலம் வெளிமாநிலங்களைச் சேர்ந்த 218 மாணவர்கள் தமிழக மருத்துவ இடங்களுக்கு விண்ணப்பித்திருப்பதாகத் தகவல் வெளியானது. இதுதொடர்பாக சட்டப்பேரவையில் இன்று (ஜூலை 10) கேள்வி எழுப்பிய திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன், ”அண்மையில் வெளியிடப்பட்ட மருத்துவ தரவரிசை பட்டியலில் போலி இருப்பிட சான்றிதழ் கொண்டு வெளிமாநில மாணவர்கள் பெயர் இடம் பெற்றுள்ளதாகவும், அவர்களுக்கு மருத்துவ இடங்கள் ஒதுக்கக் கூடாது” என்றும் வலியுறுத்தினார். அதைதொடர்ந்து, சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானமும் கொண்டு வந்தார்.

இதற்கு பதிலளித்த சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “போலி சான்றிதழ் காரணமாக 3,616 பேரின் விண்ணப்பங்கள் ஆரம்பத்திலேயே நிராகரிக்கப்பட்டது. போலி இருப்பிட சான்றிதழ் சமர்ப்பித்தால் குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.” எனத் தெரிவித்தார்.