நாகை மாவட்டத்தில் விவசாயிகளின் எதிர்ப்பை மீறி கெயில் நிறுவனம் சார்பில் விளை நிலங்களில் எரிவாயு குழாய் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுவதற்கு மதிமுக தலைவர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் கொச்சியிலிருந்து, கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு குழாய் வழியாக எரிவாயுவைக் கொண்டு செல்ல கெயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக கடந்த 2013ஆம் ஆண்டு எரிவாயு குழாயை விளைநிலங்கள் வழியாக பதிக்கும் பணியை கெயில் நிறுவனம் தொடங்கியது.

கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்கள் வழியாக கெயில் எரிவாயு குழாய் அமைக்க பணிகள் நடைபெற்றபோது, விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தியதால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில், நாகை மாவட்டம் சீர்காழி அருகே மாதானம் கிராமத்திலிருந்து 29 கிலோ மீட்டர் தொலைவிற்கு எரிவாயு குழாய் அமைக்கும் பணிகளை ஓ.என்.ஜி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. பயிரிடப்பட்டிருந்த விவசாய நிலங்களில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விவசாயிகளில் எதிர்ப்பையும் மீறி குழாய் அமைக்கும் பணியை தீவிரமாக்கியது ஓ.என்.ஜி நிறுவனம். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

சாகுபடி தொடங்கிய நிலையில் விவசாய நிலங்களை சேதபடுத்தும் முயற்சியில் கெயில் நிறுவனம் ஈடுபட்டுள்ளது கண்டனத்துக்குரியது என வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.