உத்தர பிரதேசத்திலுள்ள சந்தௌலி மாவட்டத்தில் 15 வயது இஸ்லாமிய சிறுவனை இந்துத்துவவாதிகள் சிலர் எரித்துக் கொல்ல முயற்சித்துள்ளனர். ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லாததால் தன்னை அவர்கள் எரித்துவிட்டார்கள் என்று அச்சிறுவன் மருத்துவமனையில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தூத்ஹரி பாலத்தில் தான் நடந்து சென்றுகொண்டிருந்தபோது நான்கு பேர் தன்னைக் கடத்திச் சென்றதாகவும் அவர்களில் இருவர் தனது கைகளைக் கட்டிப்போட மற்றொருவர் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி நெருப்பு பற்றவைத்துவிட்டு ஓடிவிட்டதாகவும் அச்சிறுவன் தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் தன்னை ஜெய்ஸ்ரீராம் சொல்லச் சொல்லி வற்புறுத்தியதாகவும் தான் அதற்கு இணங்க மறுத்ததால் அவர்கள் தன்னை எரித்துவிட்டு ஓடியதாகவும் தெரிவித்தார்.

உடலில் 60% தீக்காயங்களுடன் வாரணாசியிலுள்ள கபீர் சௌரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சிறுவன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இவ்விவகாரத்தை சந்தேகத்துடனேயே அணுகுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் அச்சிறுவன் கூறிய பகுதிகளின் சிசிடிவி காணொளிகளை ஆய்வு செய்தபோது, ‘அச்சிறுவன் அதில் இல்லை’ என்றும் அவர் தகவல்களை ஒவ்வொருவரிடம் ஒவ்வொருமாதிரி கூறுவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நாடெங்கும் இச்சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.