கர்நாடகத்தில் கடந்த 14 மாதங்களாக ஆட்சியில் நீடித்த மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசு கர்நாடக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் மாநில அரசு தோல்வியடைந்தது. இதனையடுத்து முதல்வர் குமாரசாமி தனது பதவியை ராஜிநாமா செய்தார். தற்போது பாஜக தலைவர் எடியூரப்பா தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது. சற்றுமுன் ராஜ்பவனில் நடந்த பதவியேற்பு விழாவில் ஆளுநர் வகுஜன் வாலாவின் முன்னிலையில் முதலமைச்சராக உறுதிமொழியேற்றுப் பதவியேற்றார். கர்நாடகத்தின் 25வது முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார் எடியூரப்பா.

முதல்வராக அவர் முதன் முதலில் 2007-இல் பதவியேற்ற போதுதான் முதன் முதலில் தென்னிந்தியாவில் பாஜக ஆட்சி அமைந்தது. ஆனால் பாஜக அரசுக்கு அளித்துவந்த ஆதரவை மதசார்பற்ற ஜனதா தளம் விலக்கிக் கொண்டதையடுத்து 7 நாட்களில் ஆட்சி கவிழ்ந்தது. பின்னர்  2008-ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை எடியூரப்பா முதல்வராகப் பதவி வகித்தார். ஆனால் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக அவர் பதவி விலக நேரிட்டது.  மேலும் கடந்த 2018 மே மாதம் ஆட்சியமைத்தபோதும் 3 நாட்களே அரசாங்கம் நீடித்தது. இந்நிலையில் 4வது முறையாக கர்நாடகா முதல்வராக எடியூரப்பா பதவியேற்றுள்ளார்.

முன்னதாக இன்று காலை, கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமைக் கோரினார் எடியூரப்பா. பதவியேற்பதற்கு சில மணி நேரத்துக்குமுன், தனது பெயரில் சில மாற்றங்கள் செய்துள்ளார் எடியூரப்பா. BS Yeddyurappa என்பதை BS Yediyurappa என்று மாற்றியுள்ளார்.

காங்கிரஸ் கட்சி எடியூரப்பாவின் பதவியேற்பு விழாவை புறக்கணித்துள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ரோஷன் பெய்க் மட்டும் எடியூரப்பாவின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார்.