‘பிராமணர்கள் பிறப்பால் மற்றவர்களை விட உயர்ந்தவர்கள்’ என்று லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, அகில பிராமண மகாசபை கூட்டம் ஒன்றில் பேசிய ஓம் பிர்லா இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் அக்கூட்டத்தில் பிர்லா பேசுகையில், “மற்ற சமூகத்தினரின் முன்னேற்றத்துக்காக எப்போதும் உழைக்கும் ஒரு சமுதாயம்தான் பிராமண சமுதாயம். நாட்டுக்கே வழிகாட்டிய சமுதாயம் பிராமண சமுதாயம். கல்வியையும், நெறிகளையும் சமூகத்தில் பரவி தழைத்தோங்கச் செய்தது பிராமண சமுதாயம்தான். ஒரு கிராமத்தில் ஒரே ஒரு பிராமணக் குடும்பம் இருந்தாலும்கூட மற்றவர்களை அந்தக் குடும்பம் கல்வியிலும், தியாகத்திலும், சேவை மனப்பான்மையிலும் மற்றவர்களைவிட உயர்ந்ததாக இருக்கும். பிராமணர்கள் பிறப்பாலேயே மற்றவர்களை விட உயர்ந்தவர்கள் ஆவர் என்று கூறியிருந்தார்.

அதுமட்டுமில்லாமல் இதுதொடர்பாக பேஸ்புக்கிலும், டிவிட்டரிலும்கூட இதே கருத்தை முன்மொழிந்துள்ளார். அதில், பிராமணர்கள் தங்களது தியாகத்தாலும், அர்ப்பணிப்பு உணர்வாலும் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளனர். இதனால்தான் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக அவர்கள் திகழ்கின்றனர் என்று கூறியுள்ளார்.

இந்தப் பேச்சை கண்டித்து பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். ராஜஸ்தான் மாநில மக்கள் சிவில் உரிமை கழக தலைவர் கவிதா ஸ்ரீவாத்சவா கூறுகையில், பிர்லா பேச்சு மிகத் தவறானது, கண்டனத்துக்குரியது. அவர் உடனடியாக இதை வாபஸ் பெற வேண்டும். மேலும் ஒரு சமூகத்தை உயர்த்திப் பேசுவதன் மூலம் அவர் மற்ற சமூகங்களை தாழ்த்தியுள்ளார். இது அரசியல் சாசனச் சட்டம் 14வது பிரிவின் படி தண்டனைக்குரியது. இந்தப் பேச்சு மற்ற சமுதாயத்தினருக்குத் தாழ்வுமனப்பான்மையை ஏற்படுத்தும் மற்றும் சாதியத்தையும் ஊக்குவிக்கும் என்றும் கூறியுள்ளார். இதுதொடர்பாக ஓம் பிர்லா மீது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்திடம் மனு கொடுக்கவுள்ளோம் என்று கூறியுள்ளார் கவிதாஸ்ரீவாத்சவா.

மேலும் குஜராத் எம்.எல்.ஏவும், தலித் செயல்பாட்டாளருமான ஜிக்னேஷ் மேவானி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபிலும் இந்தப் பேச்சுக்கு தங்களுடைய கண்டங்களைத் தெரிவித்துள்ளனர்.