பின்னாடி என்ன இருக்குது?

பின்னாடி, முன்னாடி இருந்தது இப்ப இல்ல…

முன்னாடி என்ன?

இஞ்சின்… ஹெட் லைட்… எலுமிச்சைப் பழம்.. அதுக்குமுன்னாடி இன்னொரு வண்டி…

நா அது கேக்கல… முன்னாடி பின்னாடி என்ன இருந்தது

கண்ணாடி

இப்படி, முன்னாடி பின்னாடி என்று ஏட்டிக்குப்போட்டியாக வசனங்கள், சிந்திக்கவைக்கும் கதாபாத்திர உரையாடல்கள் என கடந்த 20 வருடங்களாக தன் அங்கத வசனங்கள் மூலம் தமிழ் சபா நாடகஙகளிலும் தொலைகாட்சியிலும் சினிமாவிலும்  தொடர்ச்சியாக ஒலித்துக்கொண்டிருந்த கிரேஸி மோகனின் குரல் ஓய்ந்தது.

சபா நாடகங்களில் சமகாலமத்தியதர வாழ்வின் அபத்தங்களையும் இயலாமைகளையும் இயல்பாகப் பேசி தனக்கென தனி முத்திரை பதித்தவர் க்ரேஸி மோகன். தூர்தர்ஷந்தான் அவரை ஒரு பரந்த ரசிகர் பரப்பிற்கு முதலில் எடுத்துச் சென்றது. சினிமா அவரது ரசிகர் வட்டத்தை பெரிதாக்கியது.

கதாபாத்திரங்கள் அனைத்தும் எந்த உடல்மொழியும் இல்லாமல் பேச ஆரம்பிக்கும், பேசிமுடித்தவுடன் சிறிது நேரம் கழித்து திரையரங்க ரசிகர்கள் சிரிக்கத்தொடங்குவார்கள், நகைச்சுவை காட்சிகளுக்கென தனி அந்தஸ்ந்து, தனி கவனம், தனி ஒத்திக்கை என தமிழ் சினிமாவில் முக்கிய வசனகர்த்தாவாக வலம்வந்த மோகன் ரங்காச்சாரி என்ற இயற்பெயர் கொண்ட கிரேஸி மோகன் 1952ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி பிறந்தார். நகைச்சுவை நடிகர், வசனகர்த்தா, நாடக ஆசிரியர் என பலத்துறைகளில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

பொறியியல் கல்லூரியில் பயின்ற இவர், 1972 ஆம் ஆண்டு கல்லூரி நடைபெற்ற நிகழ்வொன்றில் நகைச்சுவை நாடகம் (கிரேட் பேங்க் ராபரி) ஒன்றை அரங்கேற்றினார். நிகழ்விற்கு வந்த கமல்ஹாசன் அந்நாடகத்தை கண்டு மெய்மறந்து மோகனைப் பாராட்டினார். நாளடைவில் அந்நிகழ்வே திரைப்படத்துறையில் இருவருக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட வழிவகுத்தது.

‘கிரேஸி கிரேயஷன்ஸ்’ என்ற பெயரில் இவர் நடத்திவந்த நாடகக்குழு உலக அளவில் புகழ்பெற்றது. 30க்கும் மேற்பட்ட நாடகங்களை உலகமுழுவதும் 7000திற்கும் அதிகமான காட்சிகளால் அரங்கேற்றியது இக்குழு.

கே.பாலசந்தரின் ‘பொய்க்கால் குதிரை’ படத்தின்மூலம் வசனகர்த்தாவான இவர், கமலுடன் இணைந்து பல படங்களில் வயிறு வலிக்க சிரிக்கும் காட்சிகளில் நடித்துள்ளார். சதி லீலாவதி, காதலா காதலா, மைக்கேல் மதனா காமராஜன், அபூர்வ சாகோதரகர், இந்தியன், அவ்வை சண்முகி, தெனாலி, பஞ்ச தந்திரம் மற்றும் வசுல் ராஜா எம்.பி.பி.எஸ்.  போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை.

அதுமட்டுமின்றி சின்னத்திரையில் வீடுமுழுக்க சிரிப்பு ஓசையை இவரது நாடகங்கள் நிரப்பின. இவரது சகோதரர் மது பாலாஜியுடன் இணைந்து தமிழ் தொலைக்காட்சிகளில் நடித்த நாடகங்கள் அத்தனையும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள்வரை குதூகலப்படுத்தி சிரிப்பு மழையை பொழிந்தது.

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் நகைச்சுவைக்கு பஞ்சம் நிலவின, பல நகைச்சுவை நடிகர்களில் உடல்மொழி, வசனம், நடிப்பு எல்லாம் மக்களுக்கு சலிப்புதொற்றிபோன நிலையில் கிரேஸி மோகனின் சிந்திக்கவைக்கும் ஜோக்குகள் மக்கள் மத்தியில் பரவலாக ஹிட் அடித்தன. கிரேஸி மோகனின் நாடகங்களில் உடல்மொழியும் வசனங்களும் ஒன்றோடொன்று போட்டியிடும்  இவர் அரங்கேற்றிய மேடை நாடகங்களில் மக்களின் சிரிப்பு சத்தம் பிண்ணனி இசைபோல எப்போதும் கேட்டவண்ணம் இருக்கும். . கிரேஸி மோகனை கமலைத் தவிர தமிழ் சினிமா இயக்குநர்கள் சரியாக பயன்படுத்தவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அன்றாட வாழ்வின் மெல்லிய அசட்டுத்தனங்களையும் அராஜகங்களையும் கிரேஸி மோகன் வெகு அழகாக கையாண்டார்.

வாழ் நாளெல்லாம் நம்மை சிரிக்கவைத்த மனிதர் இன்று முதல்முறையாக நம்மை கண்ணீர் சிந்த வைக்கிறார்.