பொதுவாக வீடுகளில் காய்கறிகளுக்கு முக்கியத்துவம் இருக்கிறதோ இல்லையோ, பாக்கெட் பாலிற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மற்ற எந்த விலையேற்றத்தையும் குடும்ப பட்ஜெட் கண்டுகொள்ளாவிட்டாலும் ஒரு லிட்டர் பால் விலையேற்றம் என்பது இல்லத்தரசிகளுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தும் விஷயமாகும்.

ஏற்கனவே நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலை காரணமாக தங்கம், பெட்ரோல், காய்கறிகள் என அனைத்துப் பொருட்களின் விலையும் நாளுக்குநாள் உயர்ந்துகொண்டே இருக்கிறது. இந்தவரிசையில் தற்போது பாலும் சேர்ந்துள்ளது. தமிழக அரசு அறிவித்திருக்கும் இந்த விலையேற்றம் வெறும் பாலின் விலையேற்றமாக மட்டும் இருக்குமென்றால் நிச்சயமாக இருக்காது. பாலிலிருந்து தயாரிக்கக்கூடிய வெண்ணெய், நெய் போன்ற பொருட்களின் விலையும் உயரும். டீக்கடைகளில் டீயின் விலையும் அதிகரிக்கலாம்.

கடந்த 2014ஆம் ஆண்டு கடைசியாக ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டது. இந்தநிலையில் பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக அரசு அறிவித்துள்ளது. மொத்தமாக பால் கொள்முதல் விலையை உயர்த்துதல், கிராமப்புற பால் உற்பத்தியாளர்களுக்கான பால் பணப்பட்டுவாடா பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுத்தல், பால் உற்பத்தியாளர் ஒன்றியங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், போன்ற பல காரணங்களை பால் விலையேற்றத்திற்கு அரசு கூறினாலும் இந்த விலையேற்றத்தைக் கண்டு நடுத்தர மக்களின் மனநிலை பெரும் அதிர்ச்சியாகவே உள்ளது,.

தமிழக அரசு அறிவித்துள்ள ஆவின் விலை உயர்வு இன்று (19.08.2019) முதல் அமலுக்கு வந்துள்ளது.  இதுவரை 1 லிட்டர் பசும்பால் 28 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 32 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. எருமைப்பால் கொள்முதல் விலை 35 ரூபாயில் இருந்து 41 ரூபாயாக விலை உயர்த்தி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பசும்பால் கொள்முதல் 4 ரூபாயும், எருமைப்பால் கொள்முதல் விலை 6 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.

மக்களின் மனநிலையை அரசுதான் சரியாக புரிந்துகொள்ளவிலையென்றால் பால் உற்பத்தியாளர் சங்கமும் சிறிதும் கவலைப்படாமல் கொள்முதல் விலையை மேலும் உயர்த்த வலியுறுத்தி, வரும் 27 ஆம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது.

இதுபற்றி பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் முகமது அலி பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “ஒரு லிட்டர் பசும்பாலின் கொள்முதல் விலை 40 ரூபாய், எருமைப்பாலின் விலை 50 ரூபாய் என நிர்ணயிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.