காஷ்மீர் மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு மற்றும் 11 மாநிலங்கள் பதிலளிக்க வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகருக்கு, 100 கம்பெனி துணை ராணுவப் படையினர் ஆகாய மார்க்கமாக இன்று (பிப்ரவரி 23) அனுப்பி வைக்கப்பட்டனர்.

புல்வாமா தாக்குதல்: 2 பேர் கைது

கடந்த 14ஆம் தேதியன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 44 வீரர்கள் பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகம்மது அமைப்புதான் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து, பாகிஸ்தான் உடனான அனைத்து விதமான உறவுகளையும் இந்தியா நிறுத்திவைத்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி இந்தியா கொடுக்கும் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். இதையடுத்து நாடெங்கும் பயங்கரவாத இயக்கங்கள் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான குரல்கள் எழுந்தன. ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பைச் சேர்ந்த இரண்டு பேரை நேற்று உத்தர பிரதேச போலீசார் கைது செய்துள்ளனர்.

காஷ்மீர் மக்களுக்கு எதிரான கருத்து

நாடெங்கும் பல்வேறு கல்வி நிறுவனங்களில் படித்துவரும் ஜம்மு காஷ்மீர் மாணவர்களைத் தாக்கும் முயற்சிகள் நடந்துவருவதாக தகவலும், காஷ்மீர் மக்களுக்கு எதிரான கருத்துகளும் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவத் தொடங்கின.

”காஷ்மீரிலுள்ள அமர்நாத்துக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். காஷ்மீரை சேர்ந்த வணிகர்களின் பொருட்களைப் புறக்கணியுங்கள். காஷ்மீரை சேர்ந்த அனைத்தையும் புறக்கணியுங்கள்.” என்று ட்விட் செய்திருந்தார் மேகாலய ஆளுநர் ததகாத்த ராய். இது சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. உத்தரப் பிரதேசம், ஹரியானா, பீகார், பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலக் கல்வி நிறுவனங்களில் பயின்றுவரும் காஷ்மீர் மாணவர்களை சில வலதுசாரி அமைப்புகள் தாக்கியதாக கூறப்படுகிறது.

காஷ்மீர் மாணவர்கள் மீது தாக்குதல்

புல்வாமாவில் ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட  தாக்குதலையடுத்து, வெளிமாநிலங்களில் பயிலும் காஷ்மீர் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும், அவர்களை பாதுகாக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எல்.என்.ராவ், சஞ்ஜிவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (பிப்ரவரி 22) விசாரணைக்கு வந்தது.

அப்போது, காஷ்மீர் மாணவர்கள் பாதுகாப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலின் கருத்துகள் கேட்கப்பட்டன. பின்னர் இதுதொடர்பாக, மத்திய அரசு மற்றும் 11 மாநிலங்கள் 4 வார காலத்துக்குள் பதிலளிக்க வேண்டுமென்று உத்தரவிட்டனர் நீதிபதிகள்.

பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்

சமூக வலைதளங்களில் காஷ்மீர் மாணவர்களை தகாத வார்த்தைகளால் திட்டுவது, அவர்களைத் தாக்குவது போன்ற செயல்களை நீதிமன்றம் பார்த்துக்கொண்டிருக்காது என்று கூறிய நீதிபதிகள், இதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் உடனடியாகக் காஷ்மீர் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

காஷ்மீர் மாணவர்கள் மீது எந்தவொரு தாக்குதலும் மேற்கொள்ளப்படவில்லை என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேக்கர் கடந்த 20ஆம் தேதி தெரிவித்தார்.

ஐநா பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்

“பயங்கரவாதம் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பட ஆரம்பித்துவிட்டது. சர்வதேச அமைதிக்குப் பயங்கரவாதம் மிகவும் அச்சுறுத்தலாக இருக்கிறது.” என்று கூறிய ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில், புல்வாமா தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்த்து. மேலும், இந்த தாக்குதலுக்கு தக்க நடவடிக்கை எடுக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட உள்ளோம் என்று ஐநா பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது.

எல்லையில் படைகள் குவிப்பு

புல்வாமா தாக்குதல் எதிரொலியாக, ஜம்மு காஷ்மீருக்குக் கூடுதலாக 100 கம்பெனி மத்திய ஆயுதப் படை போலீசாரை அனுப்ப உத்தரவிட்டுள்ளது மத்திய உள் துறை அமைச்சகம். அதன்படி இன்று (பிப்ரவரி 23) மத்திய ஆயுதப் படை போலீசார் 10,000 பேர் வான் வழியாக ஸ்ரீநகருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.