குறிப்பிட்ட எந்தவகை நோயாக இருந்தாலும் அதனைத் தடுக்க அல்லது பரவாமல் இருக்க மனிதர்கள் நாம் கையுறைகள் மற்றும் முககவசம் அணிவது வழக்கம். நோய் என்பது எந்தவகையிலும் எதன் மூலமாகவும் பரவலாம் என்பதால், வரும்முன் காப்பது நல்லது என்ற அடிப்படையில் பொது மக்கள் பலர் இந்தச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.

கடந்த சில மாதங்களில் சீன மக்களைக் காவு வாங்கிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பரவ பல வழிகள் உள்ளதால் ஒவ்வொரு நாடும் சுகாதாரத்துறையை வலுப்படுத்தி வருகின்றன. இந்நிலையில்தான் கொரோனா வைரஸ் பீதியில் பொது மக்கள் பலர் முகக் கவசம் அணிந்துகொள்ளும்  பழக்கம் வாடிக்கையாகியுள்ளது.

இதனால் சீனா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முகக் கவசங்கள் தட்டுபாடு பெருகி வருகிறது. ஏற்கனவே இந்தியாவிலிருந்து சீனாவுக்கு மாஸ்க் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. ஆனால், கடந்த 1ஆம் தேதி மாஸ்குகளை ஏற்றுமதி செய்யக்கூடாது என்று மத்திய அரசு அதற்குத் தடை விதித்தது.

இருப்பினும் மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட அண்டை நாடுகள் வழியாக ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் இந்தியாவில் மாஸ்க் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாகத் தமிழகத்தில் மாஸ்க் விலை இரண்டு மடங்குக்கும் மேலாக உயர்ந்துள்ளது.

ரூ.4க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஓரடுக்கு கவசம் ரூ.17க்கும், ரூ. 6க்கு விற்கப்பட்டு வந்த மூன்றடுக்கு கவசம் ரூ.25 முதல் 30 வரை விற்கப்படுகிறது. மறுபயன்பாடு செய்து கொள்ளக்கூடிய மாஸ்க் ரூ.137க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் இப்போது ரூ.270 வரை விற்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்திருந்தும் மாஸ்க் விலை உயர்ந்துள்ளதால் அதனைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.