ஜோலார் பேட்டை ரயில் நிலையத்திற்குத் தண்ணீர் கொண்டு வரும் முதல்கட்ட சோதனை வெற்றிகரமாக இன்று (ஜூலை 10) நிறைவு பெற்றுள்ளது.

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டதால், மக்கள் மிகுந்த அவதியடைந்துவருகின்றனர். தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதைச் சமாளிக்க, தமிழக அரசு மாற்று ஏற்பாடு மூலம் ஜோலார் பேட்டையிலிருந்து ரயில்கள் மூலம் சென்னைக்குத் தண்ணீர் கொண்டு வருவதற்காக ஏற்பாடுகளை செய்துவந்தது.

கூட்டு குடிநீர்த் திட்ட தரைதள தொட்டி உள்ள மேட்டுசக்கரகுப்பத்திலிருந்து குழாய் அமைக்கப்பட்டுள்ளது. மேட்டுசக்கரகுப்பம் தொட்டியிலிருந்து குழாய் மூலம் திறக்கப்பட்ட நீர் பார்சம்பேட்டையை சென்றடைந்தது. அங்கிருந்து சில மீட்டர்கள் தூரம் கொண்ட ரயில் நிலையத்துக்கு தண்ணீர் செல்ல வேண்டும். இதையடுத்து ஜோலார் பேட்டை ரயில் நிலையத்திற்குத் தண்ணீர் கொண்டு வரும் முதல்கட்ட சோதனை வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது.

சென்னையின் குடிநீர் பிரச்சனையை மத்திய அரசு தீவிரமாக கவனித்து வருவதாகவும், குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க அனைத்து வித உதவிகளைச் செய்யத் தயாராக இருப்பதாகவும் ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். மேலும் ஜோலார் பேட்டையிலிருந்து சென்னைக்குக் குடிநீர் கொண்டு வருவதற்குக் கூடுதல் ரயில்களை இயக்கத் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.