பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததை அடுத்து பாம்பன் தூக்குப்பாலம் வழியாக இன்று மீண்டும் ரயில் சேவை தொடங்கியது.

ராமநாதபுரத்தையும் ராமேஸ்வரம் தீவையும் இணைக்கும் 2.3 கிலோ மீட்டர் நீளம் கொண்ட பாம்பன் தூக்கு பாலத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி விரிசல் ஏற்பட்டது. பாலத்தில் விரிசல் ஏற்பட்டதையடுத்து, ரயில் சேவை நிறுத்தப்பட்டது. 6.5 டன் துருப்பிடிக்காத இரும்புக் கம்பிகளைக் கொண்டு விரிசல் சரி செய்யப்பட்டது. ஒரு வாரத்திற்கு முன்பு பாலத்தைச் சீர் செய்யும் பணிகள் நிறைவு பெற்று, ஆய்வு நடத்தப்பட்டது.

கப்பல் போக்குவரத்துக்கு ஏற்றவகையில் இருபிரிவுகளாகத் திறக்கும்படி இந்த பாலம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த பாலத்தின் வழியாக அனைத்து ரயில்களும் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. பாம்பன் பாலத்தில் பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, 84 நாட்களுக்குப் பிறகு ராமேஸ்வரத்துக்குப் பாம்பன் தூக்குப்பாலம் வழியாக இன்று (பிப்ரவரி 27)  மீண்டும் ரயில் சேவை தொடங்கியுள்ளது.