கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் ! நாள் # 24

17/04/2020,  வெள்ளிக்கிழமை . காலை மணி 09 : 00

இந்தியாவின் எந்த ஒரு மாநில அரசும், கொரோனாவுக்காக 144 தடை ஊரடங்கு உத்தரவுகளைப் பிறப்பிக்கும் முன்னரே நடந்த தப்லீக் மாநாட்டில் கலந்துக் கொண்டோர்க்கு, ஜிகாதிகள் முத்திரை குத்திய அரசும், ஊடகங்களும், நேற்று கர்நாடகாவின் நிகழ்ந்த ஒரு மத விழாவை எப்படி அணுகின என்பதைப் பார்த்தாலே நாம் எதை நோக்கித் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என எளிதில் விளங்கும் !

கர்நாடகாவின் ராவூர் கிராமம், சித்தாப்பூர் தாலுகா, குல்பர்கா மாவட்டத்தில் புகழ்பெற்ற சித்தலிங்கேஸ்வரர் ஆலயமுள்ளது.  அங்கு சித்திரைத் தேர் விழா பிரசித்தம்.  அதை மதுரை அழகர் திருவிழாவோடு ஒப்பிட்டால் நம்முடையது மலை அது மடு !

நாம் தயவு தாட்சண்யம் பார்க்காமல் மதுரை சித்திரை விழாவைத் தடை செய்துவிட்டோம்.  ஆனால், கர்நாடகாவில். நடந்துக்கொண்டிருப்பது  மதவாதிகள் ஆட்சி என்பதால், மசூதியில் தொழக் கூடினால் தடியடி நிகழ்த்திக் கலைத்துவிடு, லிங்கேஸ்வருக்கு தேர் இழுக்கக் கூடினால், கன்னத்தில் போட்டுக்கொண்டு தீப்பந்தத்தை பிடித்து விடு என்று உத்தரவிட்டுள்ளார்கள் போல ?

நேற்று பல்லாயிரம் மக்கள் நோய்த் தொற்று பற்றிய எந்த கவலையும், அக்கறையுமில்லாமல் இடைவெளியின்றி நெருக்கமாக கூடி அரோகரா எனக் கன்னடத்தில் கூவிக்கொண்டே வடம் பிடித்திழுத்திருக்கிறார்கள்.  எத்தனை கொரோனா கேஸ்கள் கூட்டத்துக்குள் வந்ததோ – பெற்றதோ ?

அப்பட்டமான அத்துமீறல் இதுதானே ?  நாடெங்கும் ஊரடங்கு செய்து, பல கோடி மக்களை பட்டினி போட்டு, பிச்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளியிருப்பது எதற்காக ?  அவர்கள் இத்துணை தியாகங்கள் புரிந்து அரசுக் கட்டளைக்கு அடங்கிக் கிடக்க, இவர்களுக்கு தேரை இழுத்து தெருவில் விட்டால்தான் ஆச்சாம், மதவெறி பீடித்த மூடர்கள் !

பிற்பகல் மதியம் 02 : 00

மதிய உணவைச் சாப்பிட்டுக்கொண்டே, ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த் தாஸ் அவர்களுடைய பேட்டியைப் பார்த்தேன்.  வங்கிகளுக்கு நிறையச் சலுகைகளைக் கொடுத்து விதிகளை தளர்வு செய்து, வங்கிகளை தாராளமாக கடனளிக்கத் தூண்டியிருப்பதாகப் பேசினார் !

அவர் சொல்லி வங்கிகள் கேட்பது போலத் தெரியவில்லை என்பதுதான் சோகம்.  ஏனெனில் ஆறு வருடங்களாக தொடர்ந்து இவர்களுடைய பரிந்துரைகளைக் கேட்டு, கேட்டு வங்கிகளின் நிதிநிலை நாசமாகப் போனதுதான் மிச்சம்.    ஆனால், வங்கிகளின் பிடிவாதம் எளிய மக்களைப் பாதிப்பதுதான் சோகம்.  மாதாந்திரத் தவணைகளைத் தள்ளிப்போடுவதற்காக அவர்கள் விதிக்கும் அதிக வட்டி, நம்மூர் கந்துவட்டித் தொகைகளைக் காட்டிலும் அதிகம், ம்ம்ம்ம் என்ன செய்ய ?  நிர்வாகமறியா அறிவிலிகள் கைகளிலல்லவா நாடு சிக்கிச் சீரழிந்துக் கொண்டிருக்கிறது ?

நள்ளிரவு மணி 12 : 00

தூக்கம் வராமல் புரண்டு அலைபேசியைக் கையிலெடுத்தால் அமெரிக்காவிலிருந்து வந்த மிகச் சூடான செய்தி கடும் அச்சமூட்டியது.  அங்கு 24 மணி நேரத்தில் 4500+ மக்கள் கொரானோ முற்றி இறந்து போயிருக்கிறார்கள்.  டிசம்பர் இறுதியில் சீனாவில் வந்த அந்த தொற்றுக்கு இன்றுவரை கூட அங்கு ஒட்டுமொத்த மரண எண்ணிக்கை அவ்வளவு இல்லாத போது, அமெரிக்காவில் ஒரே நாளில் இவ்வளவு கொத்துக் கொத்தாக மரணம் நிகழும் என்பதை நம்பவே இயலவில்லை !

வல்லரசு என்பதற்கான பொருள் இந்தக் கொரோனா முடிவிற்குப் பின் நிச்சயம் மாற்றியமைக்கப்படும் !!!

தொடரும்