ஸ்ட்ராடூலாஞ்ச்(StratoLaunch)  நிறுவனத்தால், இரண்டு விமானங்களின் உடற்பாகத்தை ஒருங்கிணைத்தவாறு  தயாரிக்கப்பட்ட ‘ராக்’ என்ற உலகின் மிகநீளமான விமானத்தின் முதல் பயணம் வெற்றிகரமாக அமைந்துள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு ராக் விமானத்தின் திட்டப்பணிகள் துவங்கப்பட்டது. மொத்தம் ஆறு போயிங் 747 இன்ஜின்களை கொண்டுள்ள ராக் விமானம், செயற்கைக்கோளைச் சுமந்து செல்லும் ராக்கெட்டுக்களைக் கொண்டு செல்வதற்காக தயாரிக்கப்பட்டுள்ளது. இது ஒரு கால்பந்து மைதானத்தைவிடவும் நீளமானதாகும். 8 ஆண்டுகளுக்குப் பிறகு திட்டப்பணிகள் நிறைவடைந்து சோதனைக்கு தயாரானது.

இந்நிலையில், தற்போது ‘ராக்’ விமானம் வடஅமெரிக்காவில் உள்ள மொகாவி பாலைவனத்தில் வைத்து தனது முதல் சோதனை பயணத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த சோதனை பயணத்தில், 17 ஆயிரம் அடி கிடைமட்ட உயரத்தில், 304 கி.மீ வேகத்தில் சென்றது.

சோதனையின் போது எடுக்கப்பட்ட வீடியோ, ஸ்டெர்டோலாஞ்ச் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இது குறித்து ஸ்ட்ராடூலாஞ்ச் நிறுவனத்தின் சிஇஓ, ஜீன் ப்ஃலாயிட் கூறுகையில், ”தற்போது ’ராக்’ விமான சோதனையின் வெற்றியை வார்த்தைகளால் சொல்ல இயலாது. இனி வரும் காலங்களில் செயற்கைக்கோள் ராக்கெட்டுக்களை தரையில் இருந்து செலுத்தப்படும் முறை இருக்காது. அதற்கு பதிலாக இது போன்று விமானத்தில் இருந்தே ராக்கெட்டுக்களை செலுத்தும் முறை கூடிய விரைவில் வரும்”  என்று தெரிவித்தார்.