ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடக் கோரி வேதாந்தா குழும்ம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

2018, மே 22ஆம் தேதியன்று, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடத்திய மக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டு தமிழக அரசு 2018, மே 28ஆம் தேதி அரசாணை வெளியிட்டது.

ஸ்டெர்லைட் ஆலைக்குத் தடை

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து வேதாந்தா குழுமம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தருண் அகர்வால் குழு அளித்த அறிக்கை அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கலாம் என 2018ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி உத்தரவிட்டது.

இந்த உத்தரவை உயர் நீதிமன்ற மதுரை கிளை நிறுத்தி வைத்ததைத் தொடர்ந்து, வேதாந்தா குழுமம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பாலிநாரிமன், நவீன் சின்கா அடங்கிய அமர்வு, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது என்றும், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்குத் தடை விதித்தும் உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக, வேதாந்தா குழுமம் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.

மீண்டும் மனு தாக்கல்

இந்நிலையில் வேதாந்தா குழுமம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (பிப்ரவரி 27, 2019) மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது என்றும், எனவே அதனை ரத்து செய்ய வேண்டும் எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும், மின் இணைப்பு, நீர் இணைப்பு வழங்க தமிழக அரசு, மாசு கட்டுப்பாட்டு வாரியம், மின் வாரியத்திற்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்துள்ளது வேதாந்தா குழும்ம். இந்த வழக்கு விரைவில் விசரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.