சென்னை ஆர்.கே.நகரைச் சேர்ந்த 12 வயது சிறுமியை, டியூஷனுக்கு செல்லும்போது 72 வயது முதியவர் உட்பட மூன்று பேர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இச்சிறுமி, ஆர்.கே.நகரில் உள்ள  அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார்.  மாலையில் டியூசன் சென்றபோது சிறுமி சோர்வாக இருப்பதைக் கண்ட ஆசிரியை, அவரை விசாரித்துள்ளார். அப்பொழுது  சிறுமி நடந்ததை கூறியதை அடுத்து, அதனை அச்சிறுமியின் தாயாரிடம் கூறியுள்ளார் ஆசிரியை. சிறுமியின் தாயார் ஆர்.கே நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவுச் செய்து அதே பகுதியைச் சேர்ந்த ரத்தினம், பெயிண்டர் லட்சுமணன்,  வளையல் வியாபாரம் செய்யும் ராஜா ஆகிய 3 பேரிடம் விசாரித்தனர். அப்போது, 72 வயது முதியவர் உட்பட 3 பேரும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியை மீட்டு குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்பினர்.

இதுகுறித்து வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவுசெய்து 3 பேரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.