‘நரகாசூரன்’ திரைப்படம் விரைவில் வெளியாகுமென தெரிவித்துள்ள இயக்குநர் கார்த்திக் நரேன், இரண்டு முக்கியமான படங்களை இயக்கப்போவதாக கூறியுள்ளார்.

ரகுமான் நடித்த ‘துருவங்கள் 16’ திரைப்படத்தை இயக்கியவர் கார்த்திக் நரேன். முதல் படமே நல்ல வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்று அவருக்கு வெற்றிப்படமானது. இதன் பிறகு அரவிந்த்சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன், இந்திரஜித் என பலர் நடித்த ‘நரகாசூரன்’ படத்தை கார்த்திக் நரேன் இயக்கினார். முழுவதும் இப்படம் நிறைவுபெற்றிருந்தாலும் வெளியீடு தாமதமாகிக்கொண்டே வருகிறது.

இந்நிலையில், தனது அடுத்த படமாக பார்த்திபன் நடிக்கும் ‘நாடக மேடை’ திரைப்படத்தை கார்த்திக் நரேன் தயாரித்து இயக்குவதாக கூறப்பட்டது. அதற்குள் அருண் விஜய் நடிக்கும் படத்தை அவர் இயக்குவதும் முடிவானது.

எனவே,  ‘நாடக மேடை’ திரைப்படத்தை கைவிட்டு, அருண் விஜய் படத்தை கார்த்திக் நரேன் இயக்குகிறார் என பேசப்பட்டது. இதற்கு விளக்கமளித்துள்ள கார்த்திக் நரேன், ‘நாடக மேடை’ கைவிடப்படவில்லை. அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இரண்டு படங்களையும் இயக்குகிறேன் என நாளிதழ் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.