பிரான்ஸ் நாட்டின் தென்பகுதியிலுள்ள கடற்கரை நகரான கான்ஸ் நகரில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் கான்ஸ் திரைப்பட விழா நடக்கும். உலகமெங்கும் உள்ள சினிமா ரசிகர்கள், விமர்சகர்கள், நடிகை நடிகர்கள் என அனைவரும் ஒன்றுகூடும் திரைப்பட விழாவாக கான்ஸ் திரைப்பட விழா இருக்கிறது.

அதேபோல இந்த ஆண்டின் 72-வது கான்ஸ் திரைப்பட விழா கடந்த செவ்வாய்க்கிழமை மே 14-ஆம் தேதி தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக ஒட்டுமொத்த திரை ரசிகர்களையும் கவரும்வகையில் விதவிதமான ஆடைகள் அணிந்து பல திரையுலக நட்சத்திரங்கள் சிவப்புக் கம்பள வரவேற்பில் உலா வருவது வழக்கம்.

இந்நிலையில் 72வது கான்ஸ் திரைப்பட விழாவில் இந்தியாவின் சார்பில் பல நடிகை நடிகர்கள் பங்கேற்றுவருகின்றன. இதில் தனது மகள் ஆராத்யாவுடன் பிரான்ஸ் நாட்டின் ரிவேரியா நகருக்கு வந்தார் நடிகை ஐஸ்வர்யா ராய். அவர் அணிந்திருந்த உடை பலரின் கவனத்தை ஈர்த்தது. தங்க நிறத்தால் ஆன, கழுத்தில் பிஷ் கட் கொண்ட மெட்டாலிக் கவுன் அணிந்து சிவப்புக் கம்பள வரவேற்புக்கு வந்தார் ஐஸ்வர்யா ராய்.. அருகில் கைப்பிடித்து வந்த அவர் மகள் ஆராத்யாவும் கண்கவரும் ஆடையில் காட்சியளித்தார்.

ஏற்கனவே நடிகைகள் தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா, கங்கணா ரணாவத், இலியானா என பலர் வித்தியாசமான ஆடைகளின் வலம்வந்துள்ளார்கள். இதனால் கான்ஸ் திரைப்பட விழா இந்திய நடிகைகளில் விதவிதமான ஆடை அலங்காரங்களால் களைகட்டியுள்ளது.