தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவராக இயக்குநர் பாரதிராஜா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்த் திரைப்பட இயக்குநர் சங்கத்தின் தலைவராக தற்போது இயக்குநர் விக்ரமன் இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ள நிலையில், புதிய தலைவரை தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இயக்குநர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை வடபழனியில் உள்ள கமலா தியேட்டரில் இன்று (ஜூன் 10) நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் சங்கத்தின் அடுத்த தலைவராக இயக்குநர் பாரதிராஜாவை தேர்ந்தெடுக்கப் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அவரை எதிர்த்து யாரும் போட்டியிடப் போவதில்லை என்பதால், அவர் ஒரு மனதாக தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இதன் தொடர்ச்சியாக, ஜூலை மாதத்தில் பாரதிராஜா இயக்குநர் சங்கத் தலைவராகப் பொறுப்பேற்கவுள்ளார். மற்ற பொறுப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில் கே.பாக்யராஜ், விக்ரமன், ஆர்.கே.செல்வமணி, பேரரசு உட்பட ஏராளமான இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.