சென்ற ஆண்டு பெண்கள் தங்கள் பாலியல் கொடுமைகளை வெளிப்படையாக தெரிவிக்க மீடூ என்ற மாபெரும் இயக்கத்தை உருவாக்கினர். அதன்மூலமாக பல பெண்கள் தங்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகளை வெளிப்படையாக பொதுவெளியில் பேசத் தொடங்கினர் அதுமட்டுமின்றி பெண்கள் தங்கள் உடல்ரீதியாக அனுபவித்த இன்னல்கள் உடல்மேல் நடந்த சுரண்டல்கள் என அடையாளம் காணப்பட்டு  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இந்நிலையில் மீடூ பிரச்சினையின் ஆரம்ப புள்ளியாக கருதப்பட்ட பாலிவுட் நடிகர் நானா பட்னேகர் வழக்கை தற்போது போலீஸார் முடிவுக்கு கொண்டுவந்துள்ளனர்.

தனுஸ்ரீ, ‘ஹாரன் ஓ.கே பீளீஸ்’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் நானாபட்னேகர் தன்னை தவறாக நடத்தியதாக குற்றம்சாட்டினார். அதை தொடர்ந்து பாலிவுட் நடிகைகள் சிலர் படப்பிடிப்பு தளத்தில் தங்களுக்கு நடந்த பாலியல் தொந்தரவுகளை சமூகவலைதளங்களில் மீடூ என்ற ஹாஷ்டேங்கில் பதிவிடத் தொடங்கினர். பின்பு இந்தியா முழுக்க பல பகுதிகளில் மீடு ஒரு இயக்கமாக வளரத் தொடங்கியது.

இந்நிலையில் மீடூ சார்பில் தொடரப்பட்ட ஆரம்ப பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றனர் போலீஸார். நடிகை தனுஸ்ரீ கொடுத்த புகாரின் அடிப்படையில் நானா பட்னேகர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்த போலீஸார், எந்தவித முகாந்திரமும் இன்றி இந்த வழக்கு தொடரப்பட்டதாகவும், வெறும் ஊடக கவனத்தை பெருவதற்காக மட்டுமே தனுஸ்ரீ இந்த வதந்தியை பரப்பியுள்ளதாகவும் கூறி வழக்கை முடித்துள்ளனர்.