ஒரு சின்ன இழையை வைத்துக்கொண்டு யூகங்களுக்கு மத்தியிலான ஒரு தங்க நிஜத்தைச் சென்றடையக்கூடிய அல்லது சென்று கிளைக்கக்கூடிய திரை முயல்வுகள் வணிகப் பிடியிலிருக்கும் யாதொரு நிலத்தின் சினிமாவிலும் அபூர்வமே. இப்படி இன்னும் கொஞ்சம் சொல்லிப் பார்க்கலாம். எங்கே வணிகப் பற்றுதல் அல்லது அழுத்தம் குறைவாக இருக்கிறதோ, அங்கே அடிக்கடி அபூர்வங்கள் நிகழக்கூடும். மராத்தி, பெங்காலி, கன்னட, மலையாள மொழிவாழ் சினிமாக்களில் இத்தகைய படங்கள் அதிகம் நிகழ்ந்தன. நெடுநாள் ஓட்டம், மக்கள் அபிமானம், வசூல், ஆகியவை கலைக்கு எதிரானவை எனக் கொள்ளத் தேவையில்லை. இவற்றுக்கு மத்தியில்தான் இலைகளோடு மலர்கிறாற் போல் கலை விளையும்.

இங்கே கவனிக்கத்தக்கவை கலைவிழையும் மனங்கள் மாத்திரமே. பரதன் அப்படியான பிடிவாதிகளில் ஒருவர். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மலையாளத்தில்தான் எடுத்த ‘தகரா’ எனும் சின்னஞ்சிறு திரைப்படத்தை ஜான்ஸனும், எம்ஜி.ராதாகிருஷ்ணனும் முறையே பின்னணி இசையையும், பாடல் இசையையும் இழைத்துத் தர, அஷோக்குமாரின் ஒளிப்பதிவில் பிரதாப் போத்தன், நெடுமுடி வேணு என தன்னிகரற்ற தகராவை, முற்றிலும் வேறு அணியினருடன் தமிழில் மீவுருச் செய்தார். வினீத், நந்தினி, கவுண்டமணி, நாசர். தமிழுக்கு இதன் மூலமாக வினீத் நல்வரவானார். மலங்கித் திரியும் பேரழகாக முன்னர் தமிழ்த்திரை அதிகம் கண்ணுறாத தாமரையாக மலர்ந்தார் நந்தினி. குழந்தையின் பாதத்தைப்போல ஒரு எளிய அன்பை நோக்கிப் பயணிக்கும் சின்னஞ்சிறிய கதை. எல்லோருக்கும் நம்பகத்தினுள் முழுவதுமாக இயங்கிப்படர்ந்த வசனங்கள், கேரளத்தின் பல தலங்கள், கண்ணில் ஒற்றிக்கொள்ளக்கூடிய ஒளிப்பதிவு, இவற்றை எல்லாம் எழுதிய பிறகு, எழுதவேண்டிய இன்னொன்று, இளையராஜாவின் அன்பு.

இசை என்பது பாரபட்சம்தான். கூடுவதும் குன்றுவதுமான ஒலிகளின் உயிர்த்தலே இசை. ரத்த அழுத்த மானி பொதிந்து தரக்கூடிய குழந்தைகளின் பட்டத்தின் வாலையொத்த காகிதத்தில் இருதய ரத்தக் குறிப்பு மேலும் கீழுமாய் ஏறி இறங்குவதையே மனித வாழ்வில் உயிர்த்தல் என்று சொல்ல முடியும். அந்த வகையில் தன்னை அகழ்ந்து தேனை நிறைக்கிற வேலையாகவே இசை படைக்க விழைந்தார் இளையராஜா, பரதன் தொடங்கிப் பல காரணங்களை எல்லாம் தாண்டி, தன் ஆகச் சிறந்த இசை அளித்தல்களை எப்போதும் வழங்கப் பிரியப்படும் சின்னஞ்சிறிய ஒரு பெயர்ப் பட்டியலைத் தயாரித்தால் அதில் பாலு மகேந்திரா, மகேந்திரன், பஞ்சு அருணாச்சலம், சங்கிலி முருகன், எனும் பெயர்களின் மத்தியில் இன்னொரு பெயரைச் சேர்க்க முடியும். அவர் ஆவாரம்பூ படத்தின் தயாரிப்பாளார் கேயார் எனும் கோதண்டராமையா. ஈரமான ரோஜாவே, தர்மா, இரட்டை ரோஜா, வனஜா கிரிஜா, காதல் ரோஜாவே, என அந்தப் பட்டியல் கட்டியம் கூறும். கேயாரின் திரைப்படங்களுக்கு அன்பை இசையாக்குவதை வழக்கமாகக் கொண்ட ராஜா, ஆவாரம்பூ படத்தை பாடல்களுக்காகவே பார்க்க வைப்பது எனத் தனக்குத்ட் ஹானே சபதம் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டாற் போல் இசை தந்தார்.

இளையராஜாவின் வருகையும், நிஜமான கிராமப் படங்களின் தொடக்கமும் அருகமை நிகழ்வுகளாக அமைந்தது சரித்திரம். கிராமம் சார்ந்த நிறைய படங்களுக்கு இசைத்திருந்தாலும் கூட, கதையின் தேவை பிம்பங்களுக்கான மறுதலிப்பு அல்லது மேலதிகம் என இசைசார் சமரசங்களுக்கு இடம் கொடுத்த வண்ணமே அதுகாறும் ஓடிக் கொண்டிருந்தது படநதி. நகர்த்தன்மையோ, நாகரிகமோ, எந்த விதத்திலும் நீர்த்துவிடாத உள்ளார்ந்த கிராமம் ஒன்றின் மாசற்ற மனோநிலை ஒன்றை படத்தின் தொடக்கக் காட்சி முதலே உருவாக்க விழைந்தார் ராஜா. எந்த விதத்திலும் யாதொரு முறையீடும் இன்றி, சன்னமான மற்றும் பலவீனமான மனிதர்களின் இசையாக ஆவாரம்பூ படத்தின் பின் இசை அமைந்தது. எப்போதெல்லாம் ஏற்கனவே எடுக்கப்பட்ட படத்தை மீவுரு செய்யும்போது அதற்குத் தான் முதல்முறையாக இசையமைக்க நேர்கிறதோ, அங்கெல்லாம் தன் ஆகச் சிறந்த இசையை வழங்கவே ராஜா முனைவார். அப்படியான ஒன்றுதான் ஆவாரம்பூ.

ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே
அதைக் கேட்டுத் தூங்கும் ஆவாரம் பூவே

இதுவரை இந்தப் பாடல் சாதாரணமாக இருக்கும். இதற்கு முன்பே வெறும் ஒற்றைக் குழலோசையாக இந்தப் பாடலைத் தொடங்கியிருப்பார் ராஜா. “தனியானால் என்ன துணை இங்கே நான் பாடும் பாட்டுண்டு” பலகோடிச் செதில்களாகத் துண்டாடிப் பின் மீண்டும் ஒன்றே எனப் பெருகும் இப்பிரபஞ்சம்.

நின்று நிதானிட்த்து எந்தவிதமான ஆர்ப்பாட்டமோ அவசரமோ இல்லாமல் தானுண்டு தன் பாதையுண்டு என்று மெல்ல அசைந்தபடி ஏறியும் இறங்கியும் பயணிக்கிற மலைரயில் போலவே இந்தப் படத்தின் பின்னணி இசை அமைந்தது.வாத்தியங்களின் சப்த சுத்தம் முன்னில்லாத அளவுக்கு இசைக்கோர்வைகள் துல்லியமாக மனம் புகுந்தன.பாடல்களும் தேவலோகத்திலிருந்து ஒலித்துச் சிறந்தன. அடுக்குமல்லி எடுத்து வந்து தொடுத்து வச்ச மாலை பாடலாகட்டும் சாமிகிட்ட சொல்லி வச்சி சேர்ந்ததிந்த செல்லக்கிளியே பாடலாகட்டும் நதியோரம் கரையோரம் ஒரு ராகம் அலைபாயும் பாடலாகட்டும் இன்றளவும் தத்தமது ரீங்காரத்தை நிறுத்திக் கொள்ளாமல் தொடர்ந்தொலிக்கும் நற்பாடல்கள்.

அந்த ஊரே கிண்டலும் எள்ளலுமாய் அணுகுகிறது அவனை.சக்கரை மனநிலை சமனற்ற வெள்ளந்தி.அவன் கண்ணறியும் தேவதை தாமரை.அவளுடைய அப்பா ஒரு மூர்க்கன். அவர் இரண்டாம் திருமணம் செய்து கொண்டு வாழ்கிறவர்.தாமரை மீது அந்த ஊரில் பலருக்கும் கண்.கபடமனம் கொண்டவர்களின் எண்ணங்களினால் சர்க்கரை பலமுறை பாதிக்கப்படுகிறான்.அவனுக்கும் தாமரைக்கும் இயல்பாகப் பூக்கிறது பேரன்பொன்று. தாமரையின் தகப்பன் சர்க்கரையை அவமானப்படுத்தி அடித்து விரட்டுகிறான்.ஒரு நாள் கத்தியோடு வந்து தாமரையின் தகப்பனைக் கொன்று விட்டு அவளை மணமுடிப்பதே சர்க்கரையின் லட்சியமாகிறது.மலையாள மூலத்தில் கொலைக்குப் பின்னால் காதலனோடு வர மறுக்கும் நாயகி வழியேதுமற்று ஓடும் ரெயில் முன் பாய்ந்து மாயும் தகரா எனும் அப்பாவின் கதையாக விரிந்திருக்கும்.தமிழில் தாமரையின் அப்பாவே நீ அவனோடு சென்று சேர்ந்து கொள் என ஆசீர்வதித்து அனுப்புவதும் சிவப்புத் துணியைக் காட்டி ரெயிலைத் தாமரை நிறுத்தி சர்க்கரையோடு சேர்வதுமாக ஆவாரம்பூ சோகத்திற்குப் பக்கவாட்டில் சந்தோஷ முடிவாகவே நிறைந்து கொண்டது.

ஆவாரம்பூ தொன்மமும் கிராமியமும் வழியும் இசைக்கோர்வைகளுக்காகவும் யதார்த்தத்தின் அளவுக்குறிப்புகள் மீறாமல் வேடங்களை அணிந்து கொண்ட நடிகர்களின் பரிமளிப்பிற்காகவும் காலமெல்லாம் கொண்டாடப் படத்தக்க ஒரு படம்.