நேர்கொண்ட பார்வை, தல 60 ஆகிய படங்களைத் தொடர்ந்து மங்காத்தா படத்தின் 2 ஆம் பாகத்தையும் போனி கபூர் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் தனது 60 ஆவது படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படம் முடிந்த பிறகு மங்காத்தா 2 படம் வெங்கட் பிரபு, அஜித், போனி கபூர் ஆகியோரது காம்பினேஷனில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடித்த படம் மங்காத்தா. இப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து மங்காத்தா படத்தின் 2ஆம் பாகத்திற்கான கதையைத் தயார்செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு கூறுகையில், “மங்காத்தா படத்தைப் போன்று மங்காத்தா 2 ஆம் பாகத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அஜித் படத்தை மறுபடியும் இயக்க ஆவலுடன் இருக்கிறேன். அது மங்காத்தா 2ஆம் பாகமா அல்லது அவருக்கான வேறு கதையா என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் வெங்கட் பிரபு, மங்காத்தா 2 ஆம் பாகத்துக்கான கதையை உருவாக்கிவிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, வெங்கட் பிரபு, போனி கபூர் இருவரும் சந்தித்துப் பேசியதாகவும், மங்காத்தா – 2 கதை போனி கபூருக்கு பிடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆதலால், நேர்கொண்ட பார்வை, தல 60 ஆகிய படங்களைப் போன்று அஜித்தை வைத்து மங்காத்தா 2 படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.