கட்சியில் அதிகாரம் படைத்த ஒருவர் அதிமுகவுக்கு தலைமை ஏற்க வேண்டும் என்றும் அதிமுகவுக்கு ஒரே தலைமை தேவை என்றும் எம்.எல்.ஏ.ராஜன் செல்லப்பா வலியுறுத்தியுள்ளார். இது அதிமுகவினரிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகிய இரண்டு பேரின் முடிவுகளுக்குக் கட்டுப்பட்டு அதிமுக கட்சி இயங்கிவருகிறது.

சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் அதிமுக படுதோல்வியைச் சந்தித்தது. இதில், தேனி மக்களவை தொகுதியில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் மட்டும் அதிமுக சார்பாக வெற்றிபெற்றார்.

இந்நிலையில், செய்தியாளர்களை இன்று (ஜூன் 8) சந்தித்தார் அதிமுகவின் எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா. அப்போது, ஜெயலலிதாவின் ஆளுமைத்திறன் தற்போது அதிமுகவில் யாருக்கும் இல்லை எனக் கூறிய அவர், அதிமுகவுக்கு ஒற்றைத்தலைமை வேண்டும் என்று கூறினார்.

அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வம் – எடப்பாடி பழனிசாமி என்று இரண்டு தலைமை இருக்கும் நிலையில், ராஜன் செல்லப்பா இவ்வாறு கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பேசிய ராஜன் செல்லப்பா, “தேர்தலில் முக்கிய தொகுதிகளை அதிமுக இழந்துவிட்டது. தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்க இன்னும் பொதுக்குழு கூட்டாதது ஏமாற்றம் அளிக்கிறது.

“அதிகாரம் யாரிடம் உள்ளது என்பதில் மக்களிடையே குழப்பம் உள்ளது. சுயநலம் இல்லாத மக்கள் பணியாற்றக்கூடிய தலைமை வேண்டும். எந்த செல்வாக்குள்ள கட்சியாக இருந்தாலும், அதிகாரமிக்க தலைமை வேண்டும். ஜெயலலிதாவின் ஆளுமைத்திறன் தற்போது இல்லை; ஆளுமை மிக்க தலைமையை உருவாக்க வேண்டும்.” என்று பேசினார்.

”அதிமுகவுக்கு ஒரே தலைமையை உருவாக்குவது பற்றி அதிமுகவின் பொதுக்குழுவில் வலியுறுத்துவோம். இரண்டு தலைமை இருப்பதால் முடிவுகளை உடனுக்குடன் எடுக்க முடியவில்லை” எனக்கூறிய ராஜன் செல்லப்பா, “தேனி எம்.பி. ரவீந்திரநாத் குமாருடன் 9 எம்எல்ஏக்கள் ஜெயலலிதா சமாதிக்குச் செல்லாதது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்.

”நான் சொல்லும் கருத்துகள் கட்சியின் உட்பிரச்னை அல்ல கட்சியில் எல்லோருக்கும் நெருடல் இருக்கிறது; நெருடலை தவிர்க்கப் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். எந்த பூசல் இருந்தாலும் அதிமுக எம்.எல்.ஏக்கள் யாரும் கட்சியை விட்டுச் செல்ல மாட்டோம்.” என்றும் ராஜன் செல்லப்பா கூறினார்.

அதிமுகவுக்கு ஒரே தலைமை தேவை என எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறியுள்ளது குறித்து, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, ராஜன் செல்லப்பாவின் பேட்டியின் முழுமையான விவரங்களைப் பார்த்த பிறகு அது குறித்துப் பதிலளிக்கிறேன் என்று நழுவிவிட்டார்.

அதிமுகவில் கோஷ்டி பூசல் உள்ளதாகக் கூறப்படுவது தவறான தகவல் ராஜன் செல்லப்பாவின் பேட்டியை பார்த்த பிறகே அது பற்றி கருத்து கூற முடியும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், அதிமுக, தொண்டர்கள் ஆளக்கூடிய கட்சி; இதில் எல்லாருமே தலைவர்கள்தான் என்று தெரிவித்தார்.