ஒரு போராட்டத்தை அழிக்க வேண்டும் என்றால் அந்தபோராட்டத்தை அரசியல் கட்சிகளிடமிருந்து தனிமைப்படுத்த வேண்டும் என்பது அரசினுடைய அடிப்படை உத்தி. ஜல்லிக்கட்டு போராட்டம் அப்படித்தான் ’அரசியல் கலப்பற்ற இளைஞர்களின்’ போராட்டமாக மாற்றப்பட்டது. அந்தப் போராட்டம் எதிர்கட்சிகளின் கையிலிருந்து எப்படி பிடுங்கப்பட்டது என்பதும் மெரீனா புரட்சியின் பின்னால் நின்றவர்கள் யார் என்ற கேள்வியும் இன்னும் பதிலளிக்கப்படாமல் இருக்கிறது. அந்தப் போராட்டத்தில் முன் நின்றவர்கள்  மக்களை கைவிட்டு ஓடியதையும், அவர்களை பிறகு தமிழர்களின் எந்தப்போராட்டக் களத்திலும் நாம் காண முடியவில்லை என்பதும் கண்கூடாகக் கண்ட எதார்த்தம்.

மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் என்பது ஒரு கட்டுக்கதை. மக்களைத் திரட்ட கட்சிகளோ அமைப்புகளோ தேவை. கட்சிகள் நேரடியாக அரசியல் மாற்றங்களை உருவாக்கக்கூடியவை. ஆனால் சிறிய அமைப்புகளோ தேர்தல் அரசியலில் தாக்கம் செலுத்த முடியாத அமைப்புகளோ ஒரு தற்காலிக அழுத்தத்தை உருவாக்கக்கூடியவை. அதனால் ஒரு போராட்டக் களம் அரசியல் கட்சிகளிடமிருந்து அபகரிக்கப்பட்டு சிறு குழுக்களிடம் ஒப்படைக்கப்படுவதும் அந்தக் குழுக்கள் தற்காலிகமாக முன்னிறுத்தப்பட்டு பிறகு மறைந்துபோவதும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஒரு போலியான தூய இலட்சியவாத அரசியல் கோஷத்தால் ஜனநாயக ரீதியிலான வெகுசன அரசியலில் இருந்து மக்கள் துண்டிக்கப்படுகின்றன.

ஜனநாயகத்தின்பாற்பட்ட வெகுசன அரசியல் என்பது சமரசங்களுக்கு உட்பட்டது. ஆனால் அதுவே தீர்வுகளை நோக்கி முன்னேறக்கூடியது. சுதந்திர இந்தியாவில் பல்வேறு பிரச்சினைகள் அரசியல் கட்சிகள், தேர்தலின் மூலமாக அதிகார மாற்றங்கள் வழியாகவே தீர்க்கப்பட்டிருக்கின்றன. சமூக நீதி சார்ந்த சட்டங்கள், திட்டங்கள் அதற்கு ஒரு உதாரணம். ஆகவே குறிப்பிட்ட பிரச்சினைகளில் வெகுசன கருத்தியலைத் திரட்டக்கூடிய பெரிய கட்சிகளே அரசிற்கு கடும் அழுத்தங்களை சட்டரீதியாகவோ களப்போராட்டங்களின் மூலமாகவோ அளிக்க முடியும்.

இந்தக் கட்சிகளிடமிருந்து பிரச்சினைகளையும் போராட்டக்களங்களையும் விலக்கி பலவீனமான தற்காலிக குழுக்களிடம் அளிப்பது அந்தப் போராட்டத்தை சிதைப்பதாகும். இந்த உத்தி சற்றே வேறுவிதமாக குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய குடியுரிமை பதிவேடு, தேசிய குடியுரிமை கணக்கெடுப்பு ஆகியவற்றிற்கு எதிராக நடக்கும் போராட்டங்களில் பயன்படுத்தப்படுகிறது. இதை முழுக்க முஸ்லிம்களின் போராட்டமாக மாற்றுவது அல்லது சித்தரிப்பது.

திமுக போன்ற ஒரு வெகுசனக் கட்சியின் நிலைப்பாடு என்ன? இதில் முதன்மையாக பாதிக்கப்படுகிறவர்கள் முஸ்லீம்கள் என்பதால் அவர்களுக்கான நியாயத்திற்காக அனைத்துத் தரப்பு மக்களையும் ஒன்றிணைப்பது. அதே சமயம் இந்த சட்டங்கள் இந்த நாட்டின் எந்த ஒரு குடிமகனின் குடியுரிமையையும் அபாயத்திற்கு உள்ளாக்கக்கூடியது என்பதை மக்களிடம் விளக்கி இது ஒரு குடிமை சமூகத்தின் பிரச்சினை என்பதை தெளிவுபடுத்துவது. அதற்காகவே இந்த இரண்டு கோடி கையெழுத்துகள். ஒத்துழையாமை இயக்கத்திற்கான அறைகூவல் எல்லாமே. ஆனால் இது தமிழர்களின் போராட்டமாக, தமிழ்நாட்டில் உள்ள இந்தியர்களின் போராட்டமாக, மத அடையாளம் கடந்த அடிப்படை உரிமைகளுக்கான போராட்டமாக அரசியல் கட்சிகளால் முன்னெடுக்கப்பட்டவுடன் உடனடியாக இது முஸ்லீம்கள் போராட்டம் என்ற சித்தரிப்பு தீவிரப்படுத்தப்படுகிறது.

இந்தசட்டத்தால் நேரடியாக பாதிக்கப்படுகிறவர்கள் முஸ்லீம்கள் என்பதால் அவர்கள் உடனடியாக களத்திற்கு வருவது இயல்பு. ஆனால் அவர்களோடு களத்தில் நிற்பவர்கள் எல்லோரும் முஸ்லீம்கள் அல்ல. வெவ்வேறு கலாச்சார பின்னணிகொண்ட மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் எல்லோரும் இதில் நிற்கிறார்கள். ஆனால் முஸ்லீம் பகுதி மட்டும் ஹைலைட் செய்யப்படுவதன் நோக்கம் என்ன? ஒரு வெகுசனப் போராட்டத்தை வெகுசன அரசியல் கட்சிகளிடமிருந்து அன்னியப்படுத்தி ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் போராட்டமாக மாற்றுவது. இதில் இன்னொரு நோக்கம் முஸ்லீம்கள் போராடுகிறார்கள் என்ற அடிப்படையில் இதற்கு எதிராக இந்துத்துவா அணி திரட்டல் ஒன்றைச் செய்வது.

இஸ்லாமியர்கள் தங்களது எந்த மத நம்பிக்கை சார்ந்த பிரச்சினைக்காகவும் போராட்டக் களத்திற்கு வரவில்லை. முத்தலாக் தடைச் சட்டம், பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு போன்ற இஸ்லாமியர்களின் மத நம்பிக்களை நேரடியாக அச்சுறுத்தக்கூடிய எந்த விவகாரத்திற்கிறகாவும் அவர்கள் தெருவுக்கு வரவில்லை. அவர்களது அடிப்படை வாழ்வுரிமைக்கான போராட்டம். இந்தச் சட்டத்தால் பாதிக்கப்படக்கூடிய அனைத்து மக்களுக்குமான போராட்டம். ஆனால் இதை மத அடையாள அரசியலுக்கான போராட்டம் போல  சித்தரிப்பது மிகவும் கீழ்த்தரமான ஒரு தந்திரம். ஆனால் ஊடகங்களில் இந்த பிம்பம் இடையறாது கட்டப்படுகிறது.

இஸ்லாமிய அமைப்புகள் இதில்  மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். தங்கள் போராட்டத்தின்மீதோ தங்கள் தலைமையின்மீதோ பாய்ச்சப்படும் தற்காலிக வெளிச்சங்களுக்குப் பின்னால் இந்தப் போராட்டங்களைச் சிதைக்கும் சதி இருக்கலாம் என்று சந்தேகிக்க வேண்டும். இந்தப் போராட்டத்தில் வெகுசன அரசியல் கட்சிகளைச் சார்ந்தே இஸ்லாமிய அமைப்புகள் செயல்படுவது அவசியம். மாறாக இதை தங்களின் தனித்துவமான போராட்டமாக கருதத் தொடங்கினால் அது எதிரிக்கு உதவுகிற விஷயமாகவே இருக்கும்