கடந்த பிப்ரவரி மாதம் இந்திய எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானின் போர் விமானத்தை தாக்கி அழித்த, இந்திய விமானப் படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானுக்கு வீர் சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. போர் களத்தில் எதிரிகளை நேருக்கு நேர் சந்திக்கும் வீரத்தை கவுரவிக்கும் வகையில் பரம் வீர் சக்ரா, மகாவீர் சக்ரா, வீர் சக்ரா ஆகிய விருதுகள் வழங்கப்படுகின்றன.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தினர் நிகழ்த்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் நுழைந்து இந்திய ராணுவம் சர்ஜிகல் தாக்குதல் நடத்தியது.  அப்போது எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானின் எஃப்.16 போர் விமானத்தை, மிக் 21 விமானத்தில் பறந்த இந்திய வீரர் அபிநந்தன் வர்தமான், ஆர்.73 என்ற குறுகிய தூரம் பாயும் ஏவுகணை மூலம் தாக்கி அழித்தார். இந்தத் தாக்குதலில் அபிநந்தனின் விமானமும் தாக்கப்பட்டு பழதடைந்தது. உடனடியாக தரையிறங்க வேண்டிய கட்டாயத்தில் அபிநந்தன் பாராசூட் மூலம் பாகிஸ்தான் பகுதியிலேயே தரையிரங்கினார்.

மேலும் பாகிஸ்தானின் பிடியில் சிக்கிய அபிநந்தனை மீட்க இந்தியா பல முயற்சிகளை எடுத்தது. இந்தியாவின் கடுமையான அழுத்தத்தை அடுத்து விடுவிக்கப்பட்ட அபிநந்தன், பல்வேறு மருத்துவ பரிசோதனைகளுக்கு தற்போது மீண்டும் போர் விமானத்தில் பறக்கத் தயாராகி உள்ளார்.

பாகிஸ்தான் போர் விமானத்தை வீழ்த்தி வீர தீரச் செயல் புரிந்தமைக்காக அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க வேண்டுமென மத்திய அரசுக்கு இந்திய விமானப் படை பரிந்துரை செய்தது. அதனையடுத்து தற்போது அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற சுதந்திர நாளன்று இந்த விருது அபிநந்தனுக்கு வழங்கப்பட உள்ளது.