இந்த நூற்றாண்டின் முதல் பத்து ஆண்டுகளின் முடிவில் நரேந்திர மோதி அடிக்கடி அந்த சொல்லாடலைப் பயன்படுத்தினார்: “குஜராத் மாடல்.” மாநிலங்களின் ஒன்றியமான இந்தியாவில் இப்படி தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் பிரம்மாண்டமான பட்டப் பெயர் பயன்படுத்தப்படுவது இது முதல் முறை அல்ல. முதலில் அதைச் செய்தது கேரளா. “கேரள முன்மாதிரி” என்று அழைக்கப்படுவது 1970களில் வேர் பிடிக்கத் துவங்கியது. திருவனந்தபுரத்திலுள்ள வளர்ச்சி ஆய்வுகள் மையம் (Centre for Developmental Studies) நடத்திய ஆய்வுகளில் துவங்கியது அந்த சொற் பதம். மக்கள் தொகை (குறையும் குழந்தை பிறப்பு விகிதம்), கல்வி (குறிப்பாக அதிக அளவிலான பெண் கல்வி), உடல் நலம் (மிகக் குறைவான பிரசவ மரணங்கள், அதிக ஆயுட்காலம்) ஆகியவை கேரளாவின் உயர்ந்த நிலையை ஏழ்மை மிகுந்த இந்த நாட்டுக்கே உணர்த்தியது. இந்த விஷயங்களில் கேரளா பல ஐரோப்பிய, வட அமெரிக்க பகுதிகளைவிட சிறந்த நிலையில் இருந்தது.

கூடிய விரைவிலேயே சமூகவியல், அரசியல் அறிஞர்கள் கேரளாவைப் புகழத் துவங்கினார்கள். 20ஆம் நூற்றாண்டின் போக்கில் சாதி, வர்க்க வேறுபாடுகள் கேரளாவில் பெரிதும் குறைந்திருப்பதாக அவர்கள் சுட்டிக் காட்டினார்கள். இந்திய அரசியல் சாஸனத்தின் 73, 74ஆம் சட்டத் திருத்தங்களை (பஞ்சாயத்துக்களுக்கு அதிக அதிகாரம் பகிர்ந்தளிக்கும் சட்டத் திருத்தம்) அமலாக்கம் செய்வதில் கேரளா முன்னணியில் இருந்ததும் கண்டறியப்பட்டது. நாட்டின் பிற பகுதிகளைவிட கேரளாவின் நகராட்சி, மாநகராட்சிகளும் பஞ்சாயத்துகளும் அதிக அதிகாரம் கொண்டிருந்தன.

ஜான் எஃப். கென்னடி சொன்னது போல வெற்றி என்று வரும் போது அதற்கு சொந்தம் கொண்டாட பலரும் வருவார்கள் (தோல்வி ஒரு அனாதை). கேரளாவின் சாதனைகள் பரவலாக அறியப்பட்டபோது பல பிரிவினரும் அதற்கு உரிமை கொண்டாடினார்கள். கேரளாவில் நீண்ட கால கட்டம் ஆட்சி நடத்திய கம்யூனிஸ்டுகள் பொருளாதாரத்தில் தாங்கள் கொண்டு வந்த அடிப்படை மாற்றங்களே அதற்குக் காரணம் என கூறினார்கள். ஸ்ரீ நாராயண குருவின் (1855-1928) வழித் தோன்றல்கள் அதிலிருந்து மாறுபட்டார்கள். சமூக சீர்திருத்தவாதியான அவர் செழிக்கச் செய்த சமத்துவ சிந்தனையே அதற்குக் காரணம் என்றார்கள். பெண் கல்விக்கு மற்ற மகாராஜாக்கள், நவாப்களைவிட திருவிதாங்கூர், கொச்சி சமஸ்தான ஆட்சியாளர் அதிக முக்கியத்துவம் கொடுத்ததே அதற்குக் காரணம் என அவர்களின் ஆதரவாளர்கள் கூறினார்கள். சிறந்த பள்ளிகள், கல்லூரிகளை நடத்திய தாங்களே அதற்குக் காரணம் என கிறிஸ்தவ சமூகம் கூறியது. அத்தனை வாதங்களையும் ஆராய்ந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சிறந்த வரலாற்று அறிஞரான ராபின் ஜெஃப்ரி அந்த பங்களிப்புகளின் உரிய முக்தியத்துவம் பற்றிய தெளிவை ஏற்படுத்தினார். பாலிடிக்ஸ், விமன் அன்ட் வெல்பீயிங் (அரசியலும் பெண்களும் உடல் நலமும்) என்ற அவரின் நூல் இது குறித்த ஆழமான ஆவணமாகும்.

“கேரள முன்மாதிரி”யின் அம்சங்கள் அந்த அளவுக்கு ஆழமாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டியதாக இருந்தது. ஆனால் 2007 வாக்கில் நரேந்திர மோதி பேச ஆரம்பித்த “குஜராத் முன்மாதிரி” என்றால் என்ன? மோதி அவர்களேகூட “குஜராத் முன்மாதிரி” என்றால் என்ன என்று தெளிவாக வரையறுக்கவில்லை. ஆனால் அதற்கு முன்பு இந்தியாவில் பேசப்பட்ட முன்மாதிரியை வைத்துத்தான் அவர் அதைச் சொல்லியிருப்பார் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. அந்த முன்மாதிரி கேரளாவின் முன்மாதிரியிலிருந்து வேறுபட்டது, உயர்ந்தது என்று உணர்த்த நினைத்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை. கேரள முன்மாதிரியில் தனியார் தொழில்களுக்கு இடமில்லை என்பது பெரிய பலவீனம். மார்க்ஸிய சிந்தனையும் தொழிற்சங்கவாதமும் அதைத் தடுத்திருந்தன. மாறாக, வைப்ரண்ட் குஜராத் என்ற பெயரில் மோதி முதல்வராக இருந்த போது இரு ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்பட்ட மாநாடுகள் தெளிவாக தனியார் முதலீட்டை ஈர்ப்பதற்காக நடத்தப்பட்டவை.

தனியார் முதலீட்டை ஈர்ப்பது என்பது தங்களது குஜராத் முன்மாதிரியின் மிகப் பெரிய சாதகம் என மோதியின் ஆதரவாளர்கள் கருதினார்கள். அவர் பிரதமராக நினைத்த போது இந்த அம்சம்தான் பெருமுதலாளிகளின் ஆதரவையும் சிறு பிசினஸ்களின் ஆதரவையும் அவருக்குப் பெற்றுத் தந்தது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஊழலினாலும் பெருமுதலாளித்துவத்தாலும் வெறுத்துப் போயிருந்த இளம் புரஃபஷனல்களும் ஆதரவை வாரி வழங்கினார்கள். ஒரு நவீனத்தின் சின்னம், இந்தியாவை பொருளாதார வல்லரசாக்குவார் என அவர்கள் நம்பினார்கள். இந்தக் குழுக்களின் ஆதரவுடன்தான் 2014 மே மாதத்தில் தேர்தலில் வென்று ஆட்சியில் ஏறினார் நரேந்திர மோதி.

குஜராத் முன்மாதிரியின் வேறு பல அம்சங்களைப் பற்றி மோதி பேசவே இல்லை. அந்த மாநிலத்தை நன்கு அறிந்த இந்திய தொழில் துறைக்கும் அது தெரியாதது அல்ல. சிறுபான்மையினர் மீதான ஒடுக்குமுறை (குறிப்பாக முஸ்லிம்கள்), அவர்கள் இரண்டாம் குடிமக்களாகவே மாற்றப்பட்டார்கள், முதல்வர் என்ற தனிநபரிடம் குவிக்கப்பட்ட அதிகாரம், தனி நபர் துதிபாடல் கலாச்சாரம், பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி, சுதந்திரம் மீதான தாக்குதல்கள், ஊடக சுதந்திரம் மீதான தாக்குதல்கள், விமர்சகர்கள், அரசியல் எதிரிகள் மீது தொடுக்கப்பட்ட பழிவாங்கல்கள் வெறித்தன.

பிரதமர் மோதியின் பிரதமர் வேட்பாளர் பிரச்சாரத்தின் போது குஜராத் முன்மாதிரியின் எதிர்மறை அம்சங்கள் அனைத்தும் மறைத்து வைக்கப்பட்டன. ஆனால் அவர் ஆட்சியில் அமர்ந்த பிறகான இந்த ஆறு ஆண்டுகளில் அவை எல்லாம் வெட்ட வெளிச்சமாகியிருக்கின்றன. அரசியலிலும் பொதுத் தளத்திலும் புகுத்தப்பட்ட வகுப்புவாதம், ஊடகங்களை மிரட்டி வழிக்குக் கொண்டு வருவது, போலீஸையும் புலனாய்வு அமைப்புகளையும் வைத்து எதிரிகளைத் துன்புறுத்துவது, எல்லாவற்றைவிட முக்கியமாக கட்சிக்குள், அமைச்சரவையில், அரசாங்கத்தில் ஒரு கடவுளின் இடத்திற்கு தன்னை நகர்த்துவது, அடிமை ஊடகங்கள்… இவைதான் மோதி அரசாங்கத்தின் அடையாளம். 2014க்கு முன்பு வரை குஜராத்தின் மிகப் பெரிய சாதனை என முன்னிறுத்தப்பட்டது எல்லாம் பொய் என இப்போது அம்பலமாகியிருக்கிறது. மோதி சந்தையை திறந்து விடுபவர் அல்ல. மாறாக, எல்லாவற்றையும் அரசின்கீழ் போட்டு நசுக்குபவர். மோதியை தீவிரமாக ஆதரித்த ஒரு முதலீட்டு வங்கியாளர் சமீபத்தில் வருத்தத்துடன் கூறினார்: “நரேந்திர மோதி மாதிரியான இடது சாரி பிரதமரை பார்க்க முடியாது. ஜவஹர்லால் நேருவைவிட பெரிய இடதுசாரி பிரதமர் இவர்.”

இது திரும்பவும் நம்மை கேரளா முன்மாதிரிக்கே அழைத்து வருகிறது. 1980கள், 90களில் அதிகம் பேசப்பட்ட கேரள முன்மாதிரியை இப்போது யாரும் அதிகம் பேசுவதில்லை. கோவிட்-19 அதற்கு புத்துயிர் கொடுத்திருக்கிறது. கொரோனா வைரஸை எதிர்கொண்டு, தடுத்து, கட்டுப்படுத்தியதில் நாட்டுக்கே ஏன் உலகிற்கே முன்மாதிரி என கேரளா நிரூபித்திருக்கிறது.

கொரோனா தொற்றின் விகிதம் எவ்வாறு கீழே சரிய வைக்கப்பட்டது என்பது பற்றி நிறைய ஊடக செய்திகள் உள்ளன. அதன் நீண்ட நெடிய வரலாறும் அதற்குக் காரணம் என புரிந்துகொள்ள முடிகிறது. ஏனென்றால் மற்றவர்களைவிட அதிக எழுத்தறிவு பெற்ற கேரள மக்கள் சரியான வழிமுறைகளைப் பின்பற்றியதால் கொரோனா தொற்று சமூகத் தொற்றாகப் பரவவில்லை. ஏனென்றால் அவர்களிடம் அற்புதமான மருத்துவ சிகிச்சை வசதிகள் உள்ளன. ஏனென்றால் நாட்டின் பிற பகுதிகளைவிட ஜாதி, பாலின பாகுபாடுகள் அங்கு குறைவு. மற்ற பகுதிகளைப் போல் மருத்துவ வசதிகள் கிடைப்பதிலும் பெரிய பாரபட்சம் இல்லை. ஏனென்றால் அவர்களின் நிர்வாகத்தின் இதயமே அதிகாரப் பகிர்வுதான். அங்குள்ள பஞ்சாயத்துக்களில் பெருந்தலைவரின் கண் அசைவிற்காக காத்திருப்பதில்லை. கேரளாவின் இத்தகைய அரசியல் அம்சங்கள் இந்தக் கொடிய காலக் கட்டத்தில் அவர்களுக்கு பெரிதும் உதவியிருக்கின்றன. கேரளாவின் பெரிய தலைவர்கள் ஒப்பீட்டளவில் எளிமையானவர்கள், குறைவான அகங்காரம் கொண்டவர்கள், பாகுபாடு காட்டுவதிலும் மற்ற பகுதிகளைவிட எவ்வளவோ மேல்.

கேரளா ஒன்றும் எல்லாவற்றிலும் கச்சிதமான மாநிலம் அல்ல. கடந்த பல பத்தாண்டுகளில் அங்கு ரொம்ப தீவிரமான வகுப்புவாத வன்முறைகள் நடந்ததில்லை என்றாலும் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களிடையிலான உறவில் ஒரு இருக்கம் இருக்கத்தான் செய்கிறது. ஆணாதிக்கமும் ஜாதீயமும் பலவீனமடைந்திருந்தாலும் அகற்றப்படவில்லை. அதன் அறிவு வர்க்கம் தேவையில்லாத அளவுக்கு தனியார் தொழில் துறை மீது சந்தேகக் கண் கொண்டிருக்கிறது. அன்னிய பண வரவு வறண்டு போன கோவிட்-19க்குப் பிந்தைய காலக் கட்டத்தில் அது கடினமாக வருத்தும் விஷயம்.

குறைகள் இருந்தாலும் கேரள மக்களிடம் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள நாம் கற்றுக்கொள்ள ஏராளம் உண்டு. நாம் மறந்து போன அந்த நன்மைகள் இப்போது மீண்டும் நினைவூட்டப்பட்டிருக்கின்றன. அறிவியல் முன்னேற்றம், வெளிப்படைத் தன்மை, அதிகாரபரவலாக்கல், சமூக சமத்துவம் ஆகியவையே அந்த மாநிலத்தின் வெற்றிக்குக் காரணம். இவையே கேரள முன்மாதிரியின் நான்கு தூண்கள். குஜராத் முன்மாதியின் நான்கு தூண்கள் என்னவென்று தெரிந்துகொள்ள வேண்டுமா? மூட நம்பிக்கை, மூடி வைக்கும் ரகசியங்கள், அதிகாரக் குவிப்பு, வகுப்புவார வன்முறை வெறுப்பு அரசியல். எந்நாளில் கேட்டாலும் கேரள முன்மாதிரியையே நான் தேர்ந்தெடுப்பேன்.

(கட்டுரையாளர் பெங்களூருவைச் சேர்ந்த வரலாற்று அறிஞர்)

தமிழில்: செந்தில்குமார்

 

Courtesy:

https://www.ndtv.com/opinion/give-us-kerala-model-over-gujarat-model-any-day-by-ramachandra-guha-2216254