சென்னை- சேலம் எட்டு வழிச்சாலை தொடர்பான வழக்கில் இன்று (ஏப்ரல் 8) சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்

சென்னை- சேலம் எட்டு வழிச்சாலை தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை இன்று ரத்து செய்து தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், இத்திட்டத்திற்கு கையப்படுத்தப்பட்ட நிலங்களையும் உரிமையாளர்களிடம் 8 வாரங்களுக்குள் திரும்பக் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தை அவசரகதியில் செயல்படுத்த தமிழக அரசு முயல்வதாக கூறிய நீதிமன்றம் அதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்தது. சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்காகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தால் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்படும். சாலை வசதி என்பது இன்று சமூகத்தினுடைய கட்டமைப்புக்கும், தொழில்துறை வளர்ச்சிக்கும் மிக அவசியம். அதனால், எட்டு வழிச்சாலை போன்ற திட்டங்கள் நாட்டுக்கு தேவை. நீதிமன்றத்தின் தீர்ப்பால் அரசுக்கு பின்னடைவு இல்லை. இதுதொடர்பாக என்ன செய்யலாம் என அனைத்துக் கட்சி தலைவர்களுடன் கூடி முதல்வர் முடிவு எடுக்கப்பார்.” என்று பேசினார்.

அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவின் எம்.பி அன்புமணி, எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த மனுதார்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.