முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ஆட்சியில் உத்தரப் பிரதேசத்தில் பாலியல் வன்புணர்வு குற்றங்கள் 26 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது, பாலியல் வன்கொடுமை, அத்துமீறல் குற்றங்கள் அபாயகரமாக 99 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. அவரது ஆட்சியின் முதல் பத்து மாதங்களிலேயே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 33 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. இந்த நிலையில் உத்தரப் பிரதேச இணை அமைச்சர் உபேந்திர திவாரி பாலியல் வன்புணர்வு குற்றங்களின் தன்மையைக் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

“பதினெட்டு வயதிற்குக் கீழ் உள்ள பெண் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகியிருக்கிறார் எனில், அதை வன்புணர்வு குற்றமாகக் கருதலாம். ஆனால் சில நேரங்களில் 30 – 35 வயதுள்ள, திருமணமான பெண்கள் எனில் அதை வன்புணர்வு குற்றமாகக் கருத முடியாது” இப்படியாக அவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். வயது, திருமண உறவிற்கும் பாலியல் வன்புணர்வு குற்றத்திற்கும் இருப்பதாக அவர் கூறியுள்ள தொடர்பு எதன் அடிப்படையில் அமைந்த புரிதல் என்ற கேள்வி இங்கே அவசியம் எழுப்பப்பட வேண்டும்.

திருமணமான பெண்கள் பாலியல் வன்கொடுமைகளைச் சந்தித்ததில்லையா? அல்லது நாம் புனிதப்படுத்தி வைத்திருக்கின்ற கன்னித்தன்மையை பெண்கள் இழந்துவிட்டால் அவர்கள் ஒரு ஆணால் வன்புணர்வு செய்யப்படமாட்டார்கள் / வன்புணர்வு என்று அதை அழைக்க முடியாது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோமா?

30 வயதுள்ள பெண்கள் என்று குறிப்பிடுவதன் மூலம் உபேந்திர திவாரி என்ன சொல்ல வருகிறார்? அந்த வயதில் பெண்கள் தன் உடல் பொலிவை இழந்திருப்பார்கள், உடல் பொலிவை இழந்த பெண்கள் தன்மேல் எறியப்படும் பாலியல் வன்கொடுமைகளை வன்கொடுமைகள் என்று குறிப்பிடக்கூடாதா? வயது, கட்டமைத்து வைத்திருக்கும் அழகுக்கான மதிப்பீடுகள் இவற்றிற்கும் வன்புணர்வு குற்றம் குற்றமென அழைக்கப்படுவதற்கும் என்ன தொடர்பு?

பரஸ்பர சம்மதம் என்ற ஒன்று இருக்கிறது. அது சின்ன தொடுதலோ, பார்வையோ அது எவ்வளவு ‘சின்னதாக’ இருந்தாலும் சரி, பாலியல் / உடல்ரீதியிலான பார்வைகள், தொடுதல்கள் நிச்சயம் இரண்டு பேரின் முழு ஒப்புதலையும் உள்ளடக்கியிருக்க வேண்டும். ஒப்புதல் இல்லையெனில், அது எவ்வளவு ‘சின்னதான’ தொடுதல், பார்வையாக இருந்தாலுமே அது பாலியல் வன்கொடுமைதான். பாலியல் குற்றங்களைக் குற்றம் என சுட்ட ஒப்புதல் இருந்ததா, இல்லையா என்று ஆராய்ந்தால் போதும். அதுவன்றி, வயதும் திருமணமும் பாலியல் குற்றங்களை எந்தவகையில் குற்றமென அறிவிப்பதில் தடையாக இருக்கப்போகின்றன?

பாலியல்ரீதியிலான நெருக்கத்திற்கு ஒப்புதல் தருவது என்பது ஏதோ ஒரு நாளில், முடிவெடுத்து சரி என்று சொல்வதால் உருவாகின்ற ஒப்பந்தம் கிடையாது. ஒவ்வொரு முறையும் ஒப்புதல் கேட்கப்பட வேண்டும், உடனிருப்பவருக்கு சம்மதம் இருக்கிறதா, இல்லையா என்பதை ஒவ்வொரு முறையும் உறுதிப்படுத்த வேண்டும். ஒப்புதல் என்பது அதனால்தான் ஒப்பந்தம் கிடையாது, ஒருமுறை கையெழுத்திட்டால் இனிமேல் எப்போதுமே சம்மதம்தான் என்று எதன் அடிப்படையிலும் முடிவு செய்துவிட முடியாது.

பின்பு, திருமணத்தின் அடிப்படையில் பாலியல்ரீதியிலான நெருக்கங்களுக்கு Permanent ஒப்புதல் என்பது எவ்வளவு கீழ்த்தரமானது? வயது, உடல் தோற்றங்களின் அடிப்படையில் ஒப்புதலை முடிவு செய்வது என்பது எவ்வளவு வன்மமானது? வயது ஏறிவிட்டால், ‘அழகாக’ இல்லாவிட்டால் அவர்களின் சம்மதம் குறித்துப் பெரிதாக யோசிக்க வேண்டியதில்லை, வன்புணர்வு குற்றமென சொல்ல வேண்டியதில்லை என்பது எவ்வளவு பெரிய வன்மம்?

அது உபேந்திர திவாரியோ, இந்திய சமூகத்தின் சாதாரண குடிமகனோ / மகளோ பாலியல் கல்வியின் அடிப்படைகளைக் கற்றுக்கொண்டு, குறைந்தபட்சம் பரஸ்பர சம்மதத்தைப் பற்றி மட்டுமாவது அறிந்துகொண்டு வன்புணர்வு குற்றங்களைக் குறித்து கருத்துத் தெரிவிக்கலாம். இல்லையென்றால், அந்த கருத்தில் இப்படியான கீழ்த்தரங்களும், வன்மங்களும்தான் வெளிப்படும்.