வாழ்க்கையில் அனைவரும் வேண்டுவது தாம் விருப்பங்களைத் தேடி ஓடுவதற்கான வற்றாத நம்பிக்கையைத்தான். அப்படியான பெரும் நம்பிக்கையுடன் ஓடிக்கொண்டிப்பவர்களின் வாழ்க்கை தான் நமக்கு ஓடுவதற்கான பலத்தை பல நேரங்களில் மீட்டுக்கொடுக்கும். இதோ, அப்படியான ஒருவரின் வாழ்க்கைதான் இது. கிரண் பவடேகர்!

மகாராஷ்டிராவின் ஒரு சிறிய கிராமத்தில் உடற்பயிற்சி கூடம் வைத்து நடத்திக்கொண்டிருக்கிறார் இவர். பல கிராமத்துப் பிள்ளைகள் இவரின் கூடத்தில் பயில்கிறார்கள். அதிகாலை, பின்பு மாலை நேரம் எனத் தான் வேலைக்குப் போகும் நேரங்கள் தவிர்த்து மற்ற நேரங்களில் இந்த உடற்பயிற்சி கூடத்தில் தான் பிள்ளைகளுக்கு பல விளையாட்டுகளைக் கற்றுக்கொடுத்துக் கொண்டிருப்பார் பவடேகர். தற்போது பவடேகர் ஒரு தடகள வீரர், குத்துச் சண்டை வீரர், நீச்சல் வீரர், உடற்பயிற்சி நிபுணர், விவசாயி, வங்கியில் காசாளர்! சிறுவயதில் பவடேகர் நடக்க சிரமப்பட்டார், ஓட மிகக் கஷ்டப்பட்டார், உடற்பயிற்சிகள் செய்ய முடியவே முடியாது அவருக்கு. ஏனென்றால், அவர் கால்கள் போலியோ தாக்குதலால் பாதிக்கப்பட்டிருந்தன. சக கிராமத்தவர்கள் அவரை மாற்றுத் திறனாளி என்று அடையாளப்படுத்தியது அவருக்குப் பிடிக்கவில்லை. அந்த பெயரை மாற்ற வேண்டுமென்பதுதான் அவரது பெரும் ஆசையாக இருந்தது.

சிறுவயதிலேயே மிகக் கடுமையான உடற்பயிற்சிகளைச் செய்யத் தொடங்கினார். ஆரம்பத்தில் அவரால் எதையும் செய்ய முடியவில்லை. பின்பு, விழுந்து விழுந்து அதே கால்களுடன் அவரால் எல்லா உடற்பயிற்சிகளையும் செய்ய முடிந்தது, ஓட முடிந்தது, அப்படியேதான் குத்துச் சண்டை ஆர்வத்தையும் வளர்த்துக் கொண்டார். ஒரு நண்பனின் உதவியுடன் குத்துச் சண்டையின் எல்லா அடிப்படைகளையும் கற்றுக்கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக போட்டிகளில் பங்கெடுக்க ஆரம்பித்தார். மெல்ல மெல்ல வெல்லவும் தொடங்கினார். இந்த விஷயங்கள் எதுவும் அவர் வீட்டினருக்குத் தெரியாது. ஒரு நாள் பக்கத்துக்கு கிராமத்திற்குத் தற்செயலாக வந்த இவரின் தந்தை குத்துச்சண்டை போட்டியைக் காணப்போக, அங்கே போட்டியில் வென்றது பவடேகர்! இப்படித்தான் அவரைப் பற்றி வீட்டிற்குத் தெரிய வந்தது. ஆனால், ஆரம்பம் முதலே அவரின் தந்தை அவருக்குப் பெரும் ஊக்கத்தைக் கொடுத்து வந்தார்.

தடகள போட்டிகளில், நீச்சல் போட்டிகளில் தேசிய அளவில், மாநில அளவில் வென்று பல பதக்கங்களைக் குவித்துள்ளார். மேலும் சில குறிப்பிடத்தகுந்த விருதுகளையும் பெற்றுள்ளார். 2013-இல் சாலை விபத்தில் அடிபட்ட இவரது இடது காலில் அறுவை சிகிச்சை நடந்தது. நான்கு கம்பிகள் வைக்கப்பட்டது. ‘கரும்பு உடைப்பதுபோல் இருந்தது என் காலை மடக்கும்போது’ என்று சொல்கிறார் பவடேகர். தொடர்ந்து அவரது வலது காலிலும் அடிபட்டது. 2 கம்பிகள் வைத்து அடுத்த அறுவை சிகிச்சை நடந்தது. 75 சதவிகிதம் போலியோவால் பாதிக்கப்பட்ட கால்கள், இடது காலில் நான்கு கம்பிகள், வலதில் இரண்டு… ஆனாலும் ‘சாதாரணமாக நடக்க வேண்டும்’, ‘மாற்றுத் திறனாளி என்று என்னை ஒதுக்கக்கூடாது’ என்ற ஆசை அவரை எழ வைத்தது. தொடர்ந்து அவர் ஓடிக்கொண்டிருக்கிறார் இன்றுவரை, தன் உடற்பயிற்சி கூடத்தில் பல பிள்ளைகளைப் பயிற்றுவிக்கிறார்.

கிரிக்கெட்டிற்குக் கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை எல்லா விளையாட்டுகளுக்கும் கொடுக்காதது ஏன் என்று கேட்கிறார் பவடேகர். கிராமங்களில் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் மைதானங்கள், கிடைக்காத வசதிகள் என்று அரசின் அலட்சியத்தைக் கடுமையாகக் கண்டிக்கிறார். இந்த உடற்பயிற்சிக்கூடத்தை நடத்துவதற்கு முற்றிலும் தனது சம்பாதியத்தையே நம்பியிருக்கிறார். மாணவர்களிடமிருந்து மிகச் சிறிய கட்டணத்தையே பெறுகிறார். அவரது ஆசை இதுதான், கிராமச் சூழலில் இருந்து நிறைய பிள்ளைகள் விளையாட்டுக்குத் துறைக்கு வர வேண்டும், சமமான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும், மாற்றுத் திறனாளிகளுக்கு முழுமையான ஆதரவைக் குடும்பங்கள் கொடுக்க வேண்டும், அவர்களின் கனவுகளைத் தேட எந்த வகையிலும் தடை விதிக்கக்கூடாது, மாற்றுத் திறனாளிகள் விளையாட்டுத் துறையில் வெல்ல எல்லா விதமான வாய்ப்புகளையும் விளையாட்டுத் துறை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும், எந்த விதமான ஒதுக்குதல்களும் கூடாது. இவற்றைத்தான் தனது பெரும் ஆசைகளாக அவர் சொல்கிறார்.

இது தான் பவடேகரின் வாழ்க்கை.