182 அடி உயர சர்தார் வல்லபாய் படேல் சிலை சுற்றுச்சூழல் பாதிப்பு, மாநிலத்தின் நிதியைப் பயன்படுத்துதல் என பல்வேறு சர்ச்சைகளை அதை  நிறுவும் காலத்திலும், சிலை திறப்பு விழாவின்போது மோடிக்கு கருப்பு பலூன்களைப் பறக்கவிட்டு எதிர்ப்பை சந்தித்த இந்த விவகாரம் தற்போது மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அது அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு 4 மாத சம்பளப் பாக்கி காரணமாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபடப்போவதுதான்.

கிட்டத்தட்ட 100 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அங்கு பாதுகாவலர்களாக, தோட்ட வேலை, துப்புரவு பணியாளர்கள், லிப்ட் பணியாளர்கள், டிக்கெட் கொடுப்பவர்களாக வேலை செய்கிறார்கள். இவர்களை UDS எனப்படும் தனியார் நிறுவனம் தினக்கூலி ஒப்பந்த அடிப்படையில் அமர்த்தியுள்ளது.

குஜராத்தின் இந்திய வர்த்தக சங்கத்தின் தலைவர் அருண் மேத்தா கூறுவது, “இவர்கள் அனைவரும் தனியார் நிறுவனம் அமர்த்தியவர்கள் இந்த நிறுவனத்திற்கு மாநில அரசு நிதி கொடுக்கிறது. 8000 ரூபாய் முதல் 14000 ரூபாய் சம்பளம் வரை வாங்கும் ஊழியர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு 4 மாதங்களாக எதுவும் தரப்படுவதில்லை. இதை எதிர்த்து அவர்கள் மனிதச் சங்கிலி அமைத்துப் போராடுகிறார்கள். இவர்களால் தீவிரமான போராட்டம் எதுவும் செய்ய இயலாது ஏனெனில் இவர்கள் ஒப்பந்த அடிப்படையில் வந்தவர்கள்.”

ஆனால் இன்னொருபுறம் மாநில அரசு, இந்தச் சுற்றுலாத் தளம்மூலம் ஏகப்பட்ட வருவாய் வருவதாகத் தெரிவித்துள்ளது. ஆனால் இதைத் தினமும் பராமரிக்கும் தினக்கூலி ஊழியர்களுக்குச் சம்பளப் பாக்கி வைத்துள்ளது. மத்திய சுற்றுலா அமைச்சர் கே.ஜே. அல்போன்ஸ் பாராளுமன்றத்தில் கூறும்போது, “ நவம்பர் 2018 இல் இருந்து ஜனவரி 2019 வரை ஒற்றுமைக்கான சிலையைப் பார்க்க வந்த பார்வையாளர்கள்மூலம் கிடைத்த வருமானம் 19.47 கோடி ரூபாய் என்றார். மேலும் நவம்பர் 2018இல் இருந்து ஜனவரி 2019 வரை இதைப் பார்க்க வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 7,81,349 என்றும் அதே நேரம் சர்தார் சரோவர் அணையைக் கடந்த 5 வருடங்களில் பார்த்தவர்களின் எண்ணிக்கை 8,22,009 என்றார்.

இதற்கு அருண் மேத்தா பதிலளிக்கையில் “இது முழுக்க அரசின்  போலித்தனத்தையே காட்டுகிறது. இவ்வளவு வருமானம் கிடைக்கிறது எனச் சொல்லுபவர்கள் ஏன் ஊழியர்களை இப்படி வதைக்கவேண்டும். 4 மாதங்களாகப் பொறுத்தவர்கள் வேறு வழியின்றிதான் போராடப்போகிறார்கள்.”

3000 கோடி ரூபாய் செலவில் உலகின் மிக உயர்ந்த சிலையை நிறுவுவது சாதனை அல்ல; அதற்குப் பின் உயர்ந்த நோக்கங்கள் இருக்க வேண்டும். கண்டிப்பாக தினக்கூலியை மட்டும் நம்பி இருக்கும் பணியாளர்களுக்குச் சம்பளம் தராமல் இருப்பது அதில் ஒன்று அல்ல.