புதிதாக தேர்வு செய்யப்பட்ட 43% நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகக் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றுள்ள 539 உறுப்பினர்களில் 43 சதவீதத்தினர் மீது குற்ற வழக்குகள் உள்ளதாக ஜனநாயக சீர்திருத்தச் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,  539 புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்து ஆய்வு செய்தபோது 233 உறுப்பினர்கள் என 43 சதவீதத்தினர்மீது குற்ற வழக்குகள் இருந்துள்ளது தெரியவந்துள்ளது.

அதிகபட்சமாக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள்மீது 116 (39%) குற்ற வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் 29 (57%), ஜேடியூ 13 (81%), திமுக 10 (43%) மற்றும் திருணாமுல் காங்கிரஸ் கட்சி 9 (51%) என கிரிமினல் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

அதில் 29 சதவீத வழக்குகள் பாலியல் வன்புணர்வு, கொலை, கொலை முயற்சி அல்லது பெண்களுக்கு எதிரான குற்றவழக்குகள் என்றும் கூறப்படுகிறது. 29 வெற்றியாளர்கள்மீது வெறுக்கத்தக்கப் பேச்சு காரணமாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

2014ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்று மக்களவை உறுப்பினர்களாக சென்றவர்களைவிட நடப்பு ஆண்டில் 26 சதவீதத்தினர்மீது குற்றவழக்குகள் அதிகமாக உள்ளன. 2014ஆம் ஆண்டு வெற்றிபெற்று நாடாளுமன்றம் சென்ற உறுப்பினர்களில் 185 நபர்கள்மீது குற்ற வழக்குகளும், 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள்மீது தீவிரமான குற்றவழக்குகளும் பதிவுசெய்யப்பட்டு இருந்தது.