சென்னையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை இதுவரை அமைக்காத 69,490 பேருக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி பகுதியில் நீர் ஆதாரங்களை பாதுகாக்கவும், அனைத்து கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அமைக்க சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், அனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்திட வார்டு வாரியாக ஒரு குழு வீதம் 200 குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இதுவரை இக்குழுக்களால் 1 லட்சத்து 42 ஆயிரத்து 396 கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்கப்பட்டிருக்கிறதா என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 31) சென்னையில் மாநகராட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அப்போது, ஆணையர் பிரகாஷ் கூறியதாவது, “மழை நீர் சேகரிப்பு கட்டமைக்கப்பட்டுள்ளதால் நிலத்தடி நீர் உயர்ந்துவருகிறது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் 4 அடி உயர்ந்துள்ளது. சென்னையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை இதுவரை அமைக்காத 69,490 பேருக்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 38,507 கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை சீரமைக்க அதன் உரிமையாளர்களுக்கு ஒரு வாரம் கெடு விதிக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவித்தார்.