நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜூன் 17ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், ஜூன் 16ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்புவிடுத்துள்ளது மத்திய அரசு.

நடந்து முடிந்த 2019 மக்களவை தேர்தலில் மோடி தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக இமாலாய வெற்றி பெற்று கடந்த மாதம் 30ஆம் தேதி பதவியேற்றது. இதை தொடர்ந்து, வரும் 17ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டம் தொடங்கும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. அத்துடன் புதிய மக்களவையின் தற்காலிக சபாநாயகராக பாஜக எம்பி விரேந்திர குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.  வரும் 17ஆம் தேதி தொடங்கும் மக்களவை கூட்டத்தில் அவர், எம்பிக்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்து, சபாநாயகருக்கான தேர்தலை நடத்துவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தக் கூட்டத்தொடர் தொடர்பாக ஆலோசிக்க மத்திய அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது. அதன்படி வரும் 16ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம் டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற கூட்டத்தை சுமுகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் மத்திய அரசின் சட்ட மசோதாவிற்கு ஆதரவும் கேட்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.