தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி ஆகஸ்ட் இறுதியில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது மாநில தேர்தல் ஆணையம்.

2011ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பதவிக்காலம் 2016 அக்டோபர் 24ஆம் தேதியுடன் முடிவடைந்தது. மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில், இன்னும் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் காலந்தாழ்த்துகிறது தேர்தல் ஆணையம். உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மனுக்கள், மேல் முறையீடு, தேர்தல் ஆணையம் விளக்கம் எனக் கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவி இடங்கள் காலியாக இருக்கின்றன. மக்களவை தேர்தல் மற்றும் தமிழகத்தில் காலியாகவுள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் முடிவடைந்து, முடிவுகளும் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்காளர் பட்டியலைத் தயார் செய்வதற்கான வழிமுறைகள் கடந்த 10ஆம் தேதி வெளியிடப்பட்டது. தற்போது, தமிழகத்தில் மறுவரையறை செய்யப்பட்ட ஒரு லட்சத்து 19 ஆயிரம் வார்டுகளுக்கு பகுதிக்கு ஏற்றார் போல வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த பணியானது ஜூலை இரண்டாவது வாரத்தில் முழுமையாக முடிக்கப்படும் என்று தெரிவித்த மாநில தேர்தல் ஆணையம், “உள்ளாட்சி தேர்தல் தேதி ஆகஸ்ட் இறுதியில் அறிவிக்கப்படும்” என்றும் தெரிவித்துள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் மட்டும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்றும் அதோடு விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்துவது குறித்து முடிவெடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊராட்சி மற்றும் கிராம ஒன்றியங்களில் வாக்குப்பெட்டி பயன்படுத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.