உத்தரப் பிரதேசத்தில் 14 வயது தலித் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை செய்த வழக்கில் ஏழு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம், முசாபர் நகர் மாவட்டத்தில் உள்ள ரோஹானா பகுதியில் இருக்கும் செங்கல் சூளையில் 14 வயது தலித் சிறுமி ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று (மே 24) உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்துள்ளார். பின்னர், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார் எனத் தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த காவல்துறை, நேற்று (மே 28) ஏழு பேரை கைது செய்துள்ளது.

”கூட்டு பாலியல் வன்கொடுமை, கொலை மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால், விசாரணைகள் நிலுவையில் இருக்கிறது.” என்று காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

”என்னுடைய மகள் மற்றும் 12 வயதான மகனை விட்டுவிட்டு, உடல்நிலை சரியில்லாதா எனது மனைவிக்குச் சந்திக்க மே 23ஆம் தேதியன்று எனது கிராமத்திற்குச் சென்றேன்” என்று சிறுமியின் தந்தை அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செங்கல் சூளையின் உரிமையாளர் மற்றும் கணக்காளர் உள்ளிட்ட ஏழு பேர் தன்னுடைய மகளை பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை செய்துள்ளனர் என்றும் சிறுமியின் தந்தை புகார் அளித்துள்ளார்.

தேசிய எஸ்.சி/எஸ்.டி ஆணையம் இந்த வழக்கு விசாரணையை எடுத்துள்ளது. தலித் அமைப்பின் உறுப்பினர்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்க போராடுவோம் எனத் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த வழக்கிற்கு நீதி கிடைக்கவில்லை என்றால் மாவட்ட அளவிலான ஸ்டிரைக் அறிவிப்போம் எனவும் தெரிவித்துள்ளனர்.