குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் தாக்கூர் இனமக்கள் வசிக்கும் கிராமங்களின் முக்கிய தலைவர்கள் கூடிய கூட்டத்தில் திருமணமாகாத பெண்கள் செல்போன்கள் பயன்படுத்த தடை என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 14ஆம் தேதி நடைபெற்ற 12 கிராமங்களைச் சேர்ந்த ஷத்திரிய தாக்கூர் சங்க கூட்டத்தில் இந்த உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் கல்லூரி செல்லும் தங்கள் பெண்களுக்கும்கூட செல்போன்களை வழங்கக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இதுமட்டுமல்லாது சாதிமறுப்பு திருமணம் செய்யும் குடும்பங்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சாதிமறுப்பு திருமணம் செய்தால் ஆணின் பெற்றோருக்கு 2 இலட்ச ரூபாயும் பெண்ணின் பெற்றோருக்கு 1.5 இலட்ச ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சட்ட சிக்கல்கள் வராமல் தடுக்க அவர்களது இந்த உத்தரவில் ‘சாதி மறுப்பு திருமணம்’ என்ற வார்த்தைகளை பயன்படுத்தாமல் சாதூர்யமாக ‘வேறு சமூகத்தை சேர்ந்தோரை மணம் செய்தால்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

அம்மாவட்டத்தின் காங். கட்சியின் பெண் எம்.எல்.ஏ “இது வரவேற்கத்தக்கது; பெண்கள் தங்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்று தான் இப்படி செய்துள்ளனர்” என்று தெரிவித்தார். மேலும் “எங்கள் இன பெண்கள் நன்கு படித்து நல்ல வேலைகளுக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கில் அவர்கள் முன்னேற்றத்தையும் சமூக வலைதளங்களால் வரும் ஆபத்தையும் கருத்தில் கொண்டு தான் இவ்வாறு உத்தரவிட்டுள்ளோம்” என்றும் கூறினார்.

ஒரு எம்.எல்.ஏவே இவ்வாறு பிற்போக்காக சிந்திப்பது மிகவும் கவலைக்குரிய ஒன்றாக உள்ளது என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இணையம் என்றாலே பொழுதுபோக்கும் சமூகவலைத்தளமும் தான் என்ற ஒரு பாமர புத்தியின் பிரதிபலிப்பே இம்முடிவு. ஆனால் உண்மையில் பெண்களில் பாதுகாப்பிற்கும் மிக முக்கியமான ஒன்று ‘செல்போன்’ தான். செல்போன் பயன்பாட்டை பற்றிய சரியான விழிப்புணர்வை நோக்கி நகராமல் இவ்வாறு பிற்போக்கான உத்தரவை பிறப்பித்திருப்பது அறிவியல் விழிப்பிணர்வின்மையை மட்டுமல்ல இச்சமூகத்தில் புரையோடிப்போயுள்ள பெண்ணடிமைத் தனத்தின் வெளிப்பாடும் ஆகும்.

பெண்களிடம் எப்படி சரியாக நடந்துகொள்ள வேண்டும்? பாலின சமத்துவம், பெண்கள் முன்னேற்றம், பாலியல் விழிப்புணர்வு என்று கற்றுத்தர அரசும் கல்வி நிலையங்களும் திட்டங்களை முன்னெடுக்கும் இத்தருணத்தில் இப்படியான பிற்போக்குவாதிகளை அரசு சரியாக அணுக வேண்டும்.