மகாராஷ்டிராவில் பாஜக- சிவசேனா கட்சிகளிடையே ஆட்சியமைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்துவருகிறது. இந்நிலையில் ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் ச்ச்தரவை நாடி சிவசேனா சரத்பவாரை அணுகியது. ஆனால் சரத்பவார் ஆதரவளிக்கமுடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

மகாராஷ்டிராவில் மொத்தம் 288 தொகுதிகள் உள்ளன. அங்கு ஆட்சியமைக்க 145 சட்டமன்ர உறுப்பினர்களின் ஆதரவு தேவை. சமீபத்தில் நடந்துமுடிந்த அம்மாநில சட்டமன்ரத் தேர்தலில் பாஜக – சிவசேனா கூட்டணியமைத்துப் போட்டியிட்டன. அதில் பாஜக – 105 இடங்களிலும் சிவசேனா – 56 இடங்களிலும் வெற்றிபெற்றன. காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் முறையே 44 மற்றும் 54 இடங்களில் வெற்றி பெற்றன. மேலும் சுயேட்சை வேட்பாளர்கள் 13 இடங்களில் வெற்றிபெற்றுளனர். ஆனால் தேர்தலுக்குப் பிறகு சிவசேனா தங்களுக்கே முதல்வர் பதவி வேண்டும் என்று பிடிவாதமாக இருக்க பாஜக – சிவசேனா கூட்டணி பிளவுபட்டது. ஆட்சியமைக்க யாருக்குமே போதிய பெரும்பான்மை கிட்டாத நிலையில் ஆட்சியைப் பிடிக்க அரசியல் சதுரங்கத்தில் காய்கள் நகர்த்தப்பட்டுவருகின்றன.

இந்நிலையில் ஆட்சியமைப்பதற்கு ஆதரவுகோரி சிவசேனை மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்தித்தார். அவர்கள் ஆட்சியமைப்பது குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியானது.

ஆனால் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த சரத்பவார் தாங்கள் சிவசேனைக்கு ஆதரவளிக்கப்போவதில்லை என்றும் எதிர்கட்சியாகவே செயல்பட விரும்புகிறோம் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் பாஜக – சிவசேனா கூட்டணிக்கு ஆதரவத்து கூட்டணிக்கு பெரும்பான்மை பலத்தை அளித்துள்ளார்கள். அவர்கள் இணைந்து விரைவில் ஆட்சியமைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

சரத்பவாரின் இந்த அறிவிப்பால் மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பதில் ஏற்பட்டிருக்கும் குளறுபடி விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.