ஒவ்வொருமுறையும் பட்ஜெட் தாக்கல் செய்யும்போதும் முந்தைய நிதியாண்டின் வரவு – செலவு கணக்குகளை (Economic Survey) புள்ளி விபரங்களோடு வெளியிடுவது வழக்கம். இம்முறை பட்ஜெட் தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வரவு செலவு கணக்குகளைப் பற்றி பெரிதாக விபரங்களைத் தெரிவிக்கவில்லை. ஆனால் பட்ஜெட்டின் கடைசியில் உள்ள இணைப்பில் (Supplementary Material) திட்டங்களுக்கான செலவுகள் பற்றியும் முந்தைய ஆண்டின் வரவுகள் பற்றியும் குறிப்புகள் இடம் பெற்றிருக்கும். அவற்றை ஆய்வு செய்து பார்த்தால் அரசு வெளியிட்ட பொருளாதாரக் கணக்கெடுப்பில் உள்ள தகவல்களும் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள முந்தைய பட்ஜெட்டின் வரவு செலவு கணக்கு விபரங்களும் ஒன்றோடொன்று முரண்பட்டிருக்கின்றன.

“2019ம் ஆண்டு பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட இடைக்கால பட்ஜெட்டிற்கு தரப்பட்ட கணக்குகளை மறுசீராய்வு செய்யாமல் மொத்த 2018-19 நிதியாண்டிற்குமானதாக கணக்குக்காட்டியுள்ளார்” என்று மார்க்சிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

தாக்கல் செய்யபட்டுள்ள பட்ஜெட்டிலுள்ள பல விபரங்கள் முற்றிலும் போலியானவையாக உள்ளது. குறிப்பாக 1,67,176 கோடி பற்றாக்குறையாக உள்ளது. பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ளபடி கணக்கிட்டால் இந்தியா 2019-20 நிதியாண்டில் 25.3 % அதிகப்படியான வருவாய் ஈட்டும்; அதாவது 4,00,000 கோடிகள் (4 இலட்சம் கோடிகள்!) இது சாத்தியமற்ற ஒரு கட்டுக்கதை! மேலும் அதில் குறிப்பிட்டுள்ளபடி 12% ஜி.டி.பி (GDP – மொத்த உள்நாட்டு உற்பத்தி) என்பதெல்லாம் கனவிலும் சாத்தியமற்றது.

மத்திய வரிகள் இழப்பினால் ஏற்படும் 91,000 கோடிகள் இழப்பில் 40 சதவீதத்தை மாநில அரசுகள் ஈடுசெய்ய வேண்டும். இது மாநில உரிமைகளில் தலையிடுவதாகவும் அவற்றின்மீது அதிக அழுத்தம் தருவதாகவும் உள்ளது. 

முதல் முழுநேர பெண் நிதியமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் பெண்களுக்காக செலவிடப்படும் தொகை கடந்த ஆண்டில் 5.1 சதவீதாமாக இருந்தது 4.9 சதவீதமாகக் குறைந்துள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ள இச்சூழலில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதித் திட்டத்திற்கான (MNREGA) நிதி 1000 கோடிகள் குறைக்கப்பட்டுள்ளது என்பது வேதனைக்குரியது.

பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை தொட்டுவிட்ட மலைப்பிலிருந்து இன்னும் சாமானியர்கள் மீளாதபோது அவற்றின் மீதான காலால் வரி 2 ரூபாய் உயர்தப்பட்டுள்ளது பொதுமக்களை வெகுவாக பாதிக்கும் ஒன்றாகும். 

பட்ஜெட் பற்றி மக்களவையில் பேசிய தமிழக உறுப்பினர் ஆ.ராசா அவர்கள் இயற்றலும்1 ஈட்டலும்2 காத்தலும்3 காத்த வகுத்தலும்4 வல்லது அரசு” என்ற திருக்குறளைச் சுட்டிக்காட்டி 1முறையாக  நிதி ஆதாரங்களை வகுத்து, 2 அராசாங்கக் கருவூலத்திற்கான வருவாயைப் பெருக்கி, 3உள்ள பொருள்களை வீணாக்காமல் காப்பாற்றுதலும், 4அதைப் பாதுகாத்துத் திட்டமிட்டுச் செலவிடுவதும்தான், திறமையான நல்லாட்சிக்கு இலக்கணமாகும்; ஆனால் இந்த அரசு இந்த எல்லா அளவுகோளிலிருந்தும் தவறியதாக இருக்கிறது என்றார்.

பட்ஜெட் என்பது வெற்றுக்கூச்சலாக இருக்கக்கூடாது! அதன் எண்களும் எண்ணங்களும் உண்மையானதாக மக்களுக்கானதாக இருக்க வேண்டும். அவ்வகையில் இந்த பட்ஜெட் நிச்சயம் கள எதார்த்ததை பிரதிபலிப்பதாக இல்லை என்பதே நிதர்சனம்.