தேர்தல் நகைச்சுவை என்பது எப்போதும் மற்ற நகைச்சுவைகளை விஞ்சக்கூடியது. இதோ ஒரு உதாரணம்.

தற்போது ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்ஆப்பில்  பரவலாக ஒரு செய்தி பகிரப்பட்டு வருகிறது. அது  பிரிட்டிஷ் உலக செய்தி நிறுவனம் பிபிசி நடத்திய ஒரு தேர்தல் கருத்துக்கணிப்பில் ஆளும் பாஜக, 2014  தேர்தலை விட பெரும் வெற்றிபெற்று அதிகாரத்திற்குப் புயல் போல வரும் என்பதுதான்.

இந்த செய்தியில் 2019 தேர்தலில் பாஜக இந்தியாவிலுள்ள அனைத்து  மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் எவ்வளவு தொகுதிகள் வெல்லும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி 543 தொகுதிகளில் பாஜக குறைந்தபட்சம் 323 தொகுதிகளிலும் அதிகபட்சமாக 380 தொகுதிகளிலும்  வெல்லும் என்றும் அந்த செய்திக்கான இணையதள இணைப்பும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அங்குச் சென்றால் ஆரம்பமே அதிர்ச்சிதான் நமக்கு. ஏனெனில் சி.ஐ.ஏ மற்றும் ஐ.எஸ்.ஐ. நடத்திய தேர்தல் முடிவுகள்தான் இவை என்று அங்குச் சொல்லப்படுகிறது.

(சி.ஐ.ஏ – அமெரிக்க உளவு நிறுவனம்,  ஐ.எஸ்.ஐ – பாகிஸ்தான் உளவு நிறுவனம்)

மாநிலம்வாரியாகக் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வெல்லக்கூடிய வாய்ப்பு என்று அவர்கள் ஒரு பட்டியலிட்டிருக்கிறார்கள். அதை நீங்களே பாருங்கள்.

◆ ஆந்திரப் பிரதேசம் (25) = 3 முதல் 4

◆ அருணாச்சல பிரதேசம் (2) = 2 முதல் 2

◆ அஸ்ஸாம் (14) = 8 முதல் 10.

◆ பீகார் (40). குஜராத் (26) = 24 முதல் 25

◆ ஹரியானா (10) = 6 முதல் 8

◆ ஹிமாச்சல பிரதேசம் (4) = 4 முதல் 4

◆ ஜம்மு-காஷ்மீர் (6) = 3 முதல் 3

◆ ஜார்கண்ட் (14) = 8 முதல் 10

◆ கர்நாடகா (28) = 24 முதல் 25

◆ கேரளா (20) = 2 முதல் 3

◆ மத்தியப் பிரதேசம் (29) = 24 முதல் 25

◆ மகாராஷ்டிரா (48) (1) = 1

◆ நாகலாண்ட் (1) = 1

◆ ஒரிசா (21) = 8 முதல் 10

◆ பஞ்சாப் (13) = 1

◆ மிசோரம் (1) 5 முதல் 6 வரை

◆ ராஜஸ்தான் (25) = 20 முதல் 24

◆ சிக்கிம் (1) = 1

◆ தமிழ்நாடு (39) = 28 முதல் 30

◆ தெலுங்கானா (17) = 1 முதல் 2

◆ திரிபுரா (2) = 2

◆ உத்தரப் பிரதேசம் (80) = 45 முதல் 70

◆ உத்தரகண்ட் (5) = 5

◆ மேற்கு வங்காளம் (42) = 10 முதல் 12

◆ அந்தமான் நிக்கோபார் (1) = 1

◆ சண்டிகர் (1) = 1

◆ தாத்ரா நகர்ஹேலி (1) = 1

◆ டாமன் & தியூ (1 ) = 1

◆ லக்க்ஷ்ட்வீப் (1) = 1

◆ தில்லி (7) = 6 முதல் 7

◆ புதுச்சேரி (1) = 1

“பிரதம மந்திரி நரேந்திர மோடிதான் இன்று நாட்டின் மிகப் பிரபலமான தலைவரானார்” என்று ஒரு கூடுதல் தகவல் வேறு.

இந்த செய்தியைத்தான் பலரும் ஃபேஸ்புக்  வாட்ஸ்ஆப் டிவிட்டர் போன்றவற்றில் பகிர்ந்து வருகிறார்கள். இதில் “பி.பி.சி யின் அதிர்ச்சியளிக்கும் தேர்தல் முடிவுகள்” என்ற தலைப்பு வேறு கொடுத்து பரப்புகிறார்கள். உண்மையில் அதிர்ச்சி அடைந்தது பி.பி.சி தான். இது முழுக்க முழுக்க போலியானது என்றும் அத்தகைய தேர்தல்  கணக்கெடுப்பு பிபிசியால் நடத்தப்படவில்லை என்று பி.பி.சியின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். இதே போன்று இதற்கு முன் ராஜஸ்தான் தேர்தலிலும் போலி பி‌பிசி கருத்துக் கணிப்பு ஒன்றை சங்கிகள் வெளியீட்டு அதன் முடிவுகள் என்னவென்று இந்தியாவிற்கே தெரியும்.

இந்த செய்தி போலியானது என்று பி.பி.சி தான் நமக்கு சொல்லவேண்டும் என்பதில்லை. தமிழ் நாட்டில் பாஜக 28 முதல் 30 இடங்களில் வெல்லும் என்ற ஒரு தகவல் போதாதா இது ஒரு அட்டகாசமான நகைச்சுவை என்று.