டெல்லியில் மே 30ஆம் தேதி நடைபெறும் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்த்க்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

2019 மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி 351 இடங்களில் அபார வெற்றிபெற்றது. பாஜக மட்டும் 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. இந்தியாவின் பிரதமராக மீண்டும் பதவியேற்கிறார் மோடி. இந்நிலையில், டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் வரும் 30 தேதி பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.

இந்த விழாவிற்கு நடிகர் ரஜினிகாந்துக்கு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நேரத்தில், தற்போது மக்கள் நிதி மய்யம் கட்சி தலைவர் கமலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தப் பதவியேற்பு விழாவில் பங்கேற்பது குறித்து கமலஹாசன் இன்னும் முடிவு செய்யவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தின்போது, கமலஹாசன், “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே.” என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு பாஜக சார்பிலிருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. இதைதொடர்ந்து, கமலின் இந்த கருத்துக்குப் பிரதமர் மோடியே கண்டனம் தெரிவித்து கருத்துப் பதிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.