2019 நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மதுரையில் தேர்தலைத் தள்ளி வைக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

மதுரை: சித்திரை திருவிழா

மதுரையில் உலக புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சித்திரைத் திருவிழா, முடிசூட்டுவிழா, திக்விஜயம், திருக்கல்யாணம், தேரோட்டம், புட்டுத் திருவிழா ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மீனாட்சி அம்மன் கோயிலில் நடப்பாண்டுக்கான சித்திரை திருவிழா வரும் ஏப்ரல் 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் 15ஆம் தேதியும், மீனாட்சியம்மன் திக் விஜயம் 16ஆம் தேதியும், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் 17ஆம் தேதியும் நடக்கிறது. இத்திருவிழாவின் முக்கிய வைபவமான தேரோட்டம் ஏப்ரல் 18ஆம் தேதி நடக்கிறது.

தேரோட்டமும், தேர்தலும்

2019 மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் தேரோட்டமும், மக்களவைத் தேர்தலும் ஒரே தினத்தில் நடைபெறவுள்ளது. சித்திரை தேரோட்டத்துக்குப் பல மாவட்டங்களிலிருந்தும் பொது மக்கள் மதுரைக்கு வருவார்கள் என்பதால் அன்றைய தினம் மதுரையில் தேர்தல் நடத்துவதில் சிரமம் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. மேலும், சட்ட ஒழுங்கு மற்றும் வாக்குபதிவில் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், சித்திரை திருவிழா தொடர்பான விவரங்களை இன்றைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று மதுரை மாவட்ட ஆட்சியருக்குத் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ உத்தரவிட்டுள்ளார்.

பாதுகாப்பு பணியில் சிக்கல் ஏற்படும்

மதுரையில் மக்களவைத் தேர்தலைத் தள்ளிவைக்கக் கோரி வழக்கறிஞர் பார்த்தசாரதி என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார். ஏப்ரல் 18ஆம் தேதி சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, அதிக மக்கள் அங்கு வர உள்ளதால் வாக்களிப்பதில் சிரமம் ஏற்படும் என்று தெரிவித்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் மனுவாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை நாளை விசாரிப்பதாகத் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகள் சார்பிலும் மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜனிடம், தேர்தலை தள்ளி வைக்கக் கோரி கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு பணியில் சிக்கல் ஏற்படும் என காவல் துறை சார்பாகவும் தெரிவிக்கப்பட்டது.

வாக்களிக்க கூடுதல் நேரம்

மாவட்ட ஆட்சியர் நடராஜன் மற்றும் காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று (மார்ச் 11) நடைபெற்றது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் நடராஜன்,  ”தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, மதுரையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் புகார்கள் தெரிவிக்கக் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.  24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறைகள் செயல்படும். தேர்தல் விதிமீறல்கள், முறைகேடுகள் நடைபெற்றால் 1950 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், “சித்திரைத் திருவிழாவையொட்டி மதுரையில் தேர்தல் நடந்தால் பாதுகாப்பு அளிப்பது சிரமம் என்பதால் கூடுதல் ராணுவத்தை வரவழைக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை குறித்தான தகவல்களை மட்டுமே தேர்தல் ஆணையத்திடமிருந்து கேட்டேன். வரும் ஏப்ரல் 19ஆம் தேதி மதுரையில் உள்ளூர் விடுமுறை. மேலும், ஏப்ரல் 18இல் 12 மணிக்குள் தேரோட்டம் முடிந்து விடும் என்பதால் மாலை கூடுதல் நேரம் வாக்களிக்க அனுமதி தர தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளோம்.” என்று தெரிவித்தார்.

தற்போது, மதுரையில் மக்களவை தேர்தல் நடைபெறுமா என்பதை தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் நடராஜன் தெரிவித்தார்.